கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரஜோதி பூஜையை தவிர்த்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களுக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். இதனை தவிர்த்து விஷு, ஓணம் பண்டிகை உள்ளிட்ட விஷேச நாட்களுக்கும் நடை திறக்கப்படும். ஆனால் கார்த்திகை மாதம் மற்றும் மகரஜோதி பூஜைக்கு ஏராளமான பக்தர்கள் பல்வேறு இடங்களிலிருந்து வருகை தருவார்கள்.


அதன்படி பங்குனி மாதம் மற்றும் உத்திர திருவிழாவை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (13 ஆம் தேதி புதன்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதரி நடையை திறந்து வைத்து தீப ஆராதனை காட்டுவார். இதனை தொடர்ந்து நாளை முதல் (14 ஆம் தேதி) வழக்கமாக சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தினசரி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, சகஸ்ர கலச பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும். 18-ந் தேதி வரை 5 நாட்கள் தந்திரி மகேஷ் மோகனரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.


மேலும் பங்குனி விழா வரும் 16 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து பத்து நாட்கள் வழக்கமான பூஜைகள் நடத்தப்படும். இவ்விழாவின் போது கூடுதல் சிறப்பாக உத்சவ பூஜை நடத்தப்படுகிறது. 10 ஆம் நாள் திருவிழாவின் போது ஐயப்பனுக்கு சிறப்பு பூஜையாக பம்பையில் ஆரட்டு விழா நடைபெறும். வரும் 25 ஆம் தேதி மாலை கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெரும். அதனை தொடர்ந்து வழக்கமான இரவு பூஜை நடத்தப்பட்டு நடை அடைக்கப்படும். பங்குனி உத்திர திருவிழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் திருவாங்கூர் தேவஸ்தான போர்டு செய்து வருகிறது.


மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையை தொடர்ந்து அதிக நாட்கள் நடை திறக்கப்பட்டிருப்பது இதுவே ஆகும். இந்த ஆண்டு மகர விளக்கு பூஜைக்காக தினசரி வரும் பக்தர்களின் கூட்டம் ஒரு லட்சத்தை கடந்து பதிவானது. இதனால் சபரிமலையே ஸ்தம்பித்து போனது. இதனால் பல மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய நேரிட்டது. பக்தர்களுக்காக தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டது. ஸ்பாட் புக்கிங் போன்ற வசதிகள் ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது நாளை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.


இந்த பூஜைகளை நேரில் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம். இதனை தொடர்ந்து, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.