தமிழ் கடவுள் என்றாலே முருகன், முருகன் என்றாலே தமிழ் கடவுள் என்பது தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழ் மக்களுக்கு மட்டும் இல்லாமல் முருக பக்தர்களுக்குத் தெரியும். அப்படிப்பட்ட தமிழ் கடவுள் முருகனுக்கு தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் பக்தர்கள் உள்ளனர். 


அறுபடை வீடு கொண்ட கடவுள் முருகனை வழிபட உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் தமிழ்நாட்டிற்கு விழாக் காலங்களில் வருவது வழக்கம். தமிழ்நாட்டில் இருக்கும் முருக பக்தர்கள் தைப்பூச நாளினை முன்னிட்டு, பாதை யாத்திரை மேற்கொண்டு முருகனை பயபக்தியுடன் லட்சோப லட்ச பக்தர்கள் வழிபடுகின்றனர். தமிழ்நாடு மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் பரவி வாழும் பக்தர்களை ஒருங்கிணைத்து மாநாடு நடத்த தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஜூன் மாத இறுதியிலோ அல்லது ஜூலை மாத தொடக்கத்திலோ இரண்டு நாட்கள் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படவுள்ளது. 


இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், “பழனியில் இதுவரை இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இதுவரை நடக்காத ஒரு நிகழ்வை நடத்தவேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறவுள்ளது. ஜூன் அல்லது ஜூலையிலே இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாடு வெகுவிமரிசையாக, உலக அளவில் இருக்கின்ற தமிழ்க் கடவுள் முருகனை வழிபடுகின்ற முருக பக்தர்கள், உலக அளவில் இருக்கக்கூடிய முருக திருக்கோவில்களை மேற்கொண்டு பராமரித்து வருகின்ற முருக பக்தர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து இரண்டு நாட்கள் முருக பக்தர்கள் மாநாட்டினை நடத்துவதென்று உயர்மட்டக் குழுவில் முடிவெடுக்கப்பட்டது. இந்த மாநாட்டிற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. 


அதேபோல் கிராம தெய்வங்களின் வரலாற்றினை அதாவது குலதெய்வங்களின் வரலாற்றினை அறிந்து கொள்ளும் வகையில் காஃபி டேபிள் புக் புத்தகமாக வெளியிட முடிவெடுக்கப்பட்டு அதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். 


இந்து சமய அறநிலையத் துறை சார்பில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அறநிலையத் துறை ஆலோசனைக் குழு கூட்டம் சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, ”தமிழ்நாடு முழுவதும் ஏற்கெனவே உள்ள 108 புத்தக விற்பனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்துடன் இந்தாண்டு புதிதாக 100 கோயில்களில் புத்தக விற்பனை மையங்கள் தொடங்கப்படவுள்ளன. போதிய நிதி வசதியற்ற 500 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தமிழ் கடவுள் முருகனுக்கு உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களை ஒன்றுகூட்டி பல நிகழ்வுகளை மேற்கொள்ளவும், தமிழ் கடவுள் முருகனின் புகழுக்கு புகழ் சேர்க்கும் வண்ணம் உலக முருக பக்தர்கள் மாநாட்டை பழனியில் நடத்தவும் உயர்மட்டக் குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.