சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகள் தவிர ஒவ்வொரு தமிழ் மாதம் பிறக்கும்போது நடைகள் திறக்கப்படும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். 


அதன்படி, வருகின்ற வெள்ளிக்கிழமை தமிழ் புத்தாண்டு (சித்திரை) பிறக்க இருக்கிறது. இதையடுத்து, சித்திரை விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட இருக்கிறது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறக்க இருக்கிறார். தொடர்ந்து,  தீபாராதனையும் நடைபெற இருக்கிறது. 


பக்தர்கள் : 


நடைதிறப்பு மற்றும் தீபாராதனைக்கு பிறகு. 18ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். தொடர்ந்து, நாளை (புதன்கிழமை) முதல் தினசரி அதிகாலை 4.30 மணிக்கு பள்ளியுணர்த்தல், 5 மணிக்கு கோயில் நடைதிறந்து நிர்மால்ய தரிசம், கணபதி ஹோமமும் நடைபெற இருக்கிறது. அதன்பிறகு காலை 5.30 மணி முதல் 9 மணி வரை நெய் அபிஷேகம், அஷ்டாபிஷேகம், உச்ச பூஜை நடத்தப்பட்டு, மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட இருக்கிறது. 


மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6.30 மணிக்கு தீபாராதனையும், இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் மற்றும் படி பூஜை நடத்தப்பட்டு இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. 


ஆன்லைன் முன்பதிவு: 


சித்திரை மாதம் பிறக்க இருப்பதால் 9 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற இருக்கிறது. இந்த தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவும், ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக  இன்று முதல் சிறப்பு பேருந்து வசதியையும் கேரள  போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


சித்திரை விஷூ:


சித்திரை விஷூக்காக கொடியேற்றம் நிகழ்ச்சி கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்றது. விஷு விழாவுக்காக இன்று முதல் 19 ஆம் தேதி வரை சபரிமலையில் நடை திறக்கப்பட்டு, பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. ஏப்ரல் 15 ஆம் தேதி சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு, அன்று அதிகாலை 4 மணி முதல் சபரிமலை ஐயப்பன் காய்கனி அலங்காரத்தில் காட்சியளிக்க இருக்கிறார். 


தொடர்ந்து வருகின்ற 19ம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்பட இருக்கிறது.