கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரஜோதி பூஜையை தவிர்த்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களுக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். இதனை தவிர்த்து விஷு, ஓணம் பண்டிகை உள்ளிட்ட விஷேச நாட்களுக்கும் நடை திறக்கப்படும். ஆனால் கார்த்திகை மாதம் மற்றும் மகரஜோதி பூஜைக்கு ஏராளமான பக்தர்கள் பல்வேறு இடங்களிலிருந்து வருகை தருவார்கள்.
சித்திரை மாத சிறப்பு வழிபாடு:
அந்த வகையில் கடந்த மாதம் பங்குனி உத்திர திருவிழாவிற்காக 13 ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 25 ஆம் தேதி நடை மூடப்பட்டது. பங்குனி உத்திர விழாவை ஒட்டி சுவாமி ஐயப்பனுக்கு பம்பையில் ஆரட்டு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து சித்திரை மாத பூஜைக்காக நாளை மறுநாள் நடை திறக்கப்படுகிறது.
சித்திரை மாதம் மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. ந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதரி நடையை திறந்து வைத்து தீப ஆராதனை காட்டுவார். இதனை தொடர்ந்தி ஏப்ரல் 11 ஆம் தேதி காலை 5 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். 10 ஆம் தேதி திறக்கப்படும் நடை 18 ஆம் தேதி மூடப்படுகிறது. இடைப்பட்ட நாட்களில் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, சகஸ்ர கலச பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும்.
சிறப்பு பேருந்துகள்:
விஷு பண்டிகை என்பது மலையாள மக்களின் வருடப்பிறப்பாகும். இந்த பண்டிகையை ஒட்டி ஏராளமான பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வருகை தருவார்கள். பக்தர்களில் வசதிக்காக சேரள அரசின் சிறப்பு பேருந்துகள் பத்தனம்திட்டா, கோட்டயம், செங்கன்னூர், திருவனந்தபுரம், கொட்டாரக்கரை, எர்ணாகுளம், பாலக்காடு உள்பட முக்கிய பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்பட உள்ளது.
மேலும் சபரிமலை ஐயப்பன் கோயில் சிறப்பு பூஜைகளை நேரில் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம். இதனை தொடர்ந்து, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.