தஞ்சாவூர்: ராமநவமி விழாவையொட்டி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ராமசுவாமி கோவில் தேர் கட்டுமான பணிகள் வெகு மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் பக்தர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


தென்னக அயோத்தி என அழைக்கப்படுகிறது


தஞ்சாவூர் மாவட்ம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ராமசாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ரகுநாத நாயக்கர் மன்னரால் கட்டப்பட்டதாகும். தென்னக அயோத்தி என்று மிகவும் பெருமையுடன் பக்தர்களால் இக்கோயில் அழைக்கப்படுகிறது. மற்ற கோவில்களில் ராமனும் சீதையும் தனித்தனி ஆசனத்தில் அமர்ந்து காட்சியளிப்பார்கள். ஆனால் ராமசாமி கோவிலில் இருவரும் ஒரே ஆசனத்தில் அருகருகே அமர்ந்து அருள்பாலிக்கின்றனர் என்பதும் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று.


வில் ஏந்திய லட்சுமணன், சாமரம் வீசும் சத்ருக்கனன்


வில்களை ஏந்தியபடி லட்சுமணனும், இடதுபுறம் சாமரம் வீசும் நிலையில் சத்ருக்கனும், வலது புறம் குடை பிடித்தவாறு பரதனும் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். அனுமான் எந்த ஆலயத்திலும் இல்லாத வகையில், ஒரு கையில் வீணை மற்றொரு கையில் ராமாயண புத்தகத்துடன் இருப்பது தனி சிறப்பாக கூறுகின்றனர் இறையன்பர்கள். இது, ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்புக்குரிய தலமாகும். ஆங்காங்கே உள்ள நாயக்கர் கால சிற்பங்கள் கோயிலை மேலும் அழகாக்கின்றன. அத்துடன், ராமாயணத்தின் அனைத்து காண்டங்களும் கோயில் சுற்று சுவர் முழுவதும் மூலிகை வண்ணங்களால் வரையப்பட்டுள்ளது.


வட அயோத்தி சென்று ராமனின் பட்டாபிஷேக காட்சியை காண முடியாதவர்கள், இந்த ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தால் அதே பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இவ்வாறு பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் ஆண்டு தோறும் ராமநவமி விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ராமநவமி வரும் 17-ம்தேதி (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது.


பந்தக்கால் முகூர்த்தம் 


இந்த ஆண்டு ராமநவமி பெருவிழாவை முன்னிட்டு கோவில் மற்றும் திருத்தேருக்கு பந்தக்கால் முகூர்த்தம் நடும் விழா கடந்த 29-ந் தேதி நடந்தது. வருகிற 8-ம்தேதி (செவ்வாய்க்கிழமை) திருமஞ்சனமும், இரவு அனுக்ஞை, கருடப்ரதிஷ்டையும் நடக்கிறது. 9-ம்தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு கொடியேற்ற விழா நடக்கிறது. அதன்பின்னர் தினமும் சாமி பல்வேறு வானங்களில் வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 17-ந் தேதி நடக்கிறது.


தேர் கட்டுமானப்பணிகள் மும்முரம்


இதற்காக தற்போது தேரின் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இக்கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் ராமநவமி விழா மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இதில் தேரோட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நிலையில் தேர் கட்டுமானப்பணிகள் நடப்பதால் பக்தர்கள் உற்சாகம் அடைந்துள்ளளனர்