சபரிமலை ஐயப்பன் கோயில் என்பது மிகவும் ஆத்மார்த்தமான ஆன்மிக பூமியாக திகழ்கிறது. இந்த கோயிலுக்கு செல்ல வேண்டும் என்றால் பதினெட்டு படி ஏறி சென்று வழிபட வேண்டும்.
சபரிமலை ஐயப்பன் கோயில் பாடல் ஒன்றில் கூட “ பதினெட்டு படி மீது ஏறிடுவார்.. கதியென்று அவனை சரணடைவார்.. மதி முகம் கண்டே மயங்கிடுவார்... ஐயனைத் துதிக்கையிலே... தன்னையே மறந்திடுவார்” என்ற வரிகள் கேட்கும்போதே நமக்குள் ஒரு மெய் சிலிர்ப்பு ஏற்படும். அப்படிப்பட்ட 18ம் படியின் வரலாறு பற்றி அறிந்து கொள்ளலாம். சபரிமலை ஐயப்பன் கோயில் கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ளது.
இந்த கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்திற்காக 48 நாட்கள் நடை திறக்கப்பட்டிருக்கும். இப்படியான நிலையில் சபரிமலைக்கு உள்ளூர் முதல் உலகம் வரையுள்ள பல்வேறு வயதுடைய பக்தர்களும் மாலை அணிந்து, விரதம் இருந்து, இருமுடி சுமந்து பெருவழி மற்றும் சிறுவழி பாதை வழியாக ஐயப்பனை துதித்து வருகிறார்கள். இதில் பெருவழி பாதை சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. சிறுவழி பாதை 7 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும்.
பதினெட்டு படியின் வரலாறு
பலருக்கு சபரிமலையில் ஏன் 18 படி உள்ளது என்ற கேள்வி எழலாம். தங்கத்தகடு பதிக்கப்பட்ட இந்த 18 படி வழியாக இருமுடி கட்டி வரும் பக்தர்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். சாதாரணமாக வழிபட வரும் பக்தர்கள் அதன் அருகில் இருக்கும் படி வழியாக செல்ல முடியும்.
இப்படியான நிலையில் மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே போர் நடைபெற்றது. பதினெட்டு நாட்கள் நீடித்த இந்த போரில் அதர்மத்தை வென்று தர்மத்தை நிலை நாட்டி தர்மர் அரியணை ஏற அந்த பரந்தாமன் உதவினார் என்பது இதிகாசத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதேபோல் பழம்பெருமை கொண்ட தமிழிலும் பதிணென் கீழ்க்கணக்கு நூல்களும் உள்ளது. இதேபோல் மனிதனின் தீய குணங்கள் என 18 என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அவற்றை எல்லாம் விடுத்து மாலை அணிந்து விரதம் இருந்து இறைவனை அடைவதற்காக ஆத்மார்த்தமான வழியை குறிப்பதே இந்த 18 படியின் நோக்கமாக பார்க்கப்படுகிறது. இந்த 18 படி ஏறுவது 18 உலகங்களையும் வென்ற சிறப்பை நமக்கு கொடுக்கும் என சொல்லப்படுகிறது. அதேசமயம் இந்த 18 படிகளில் விநாயகர், சிவன், பார்வது, பிரம்மா, விஷ்ணு, முருகன், காளி போன்ற தெய்வங்கள் வசிப்பதாக நம்பப்படுகிறது. இப்படி பதினெட்டு படிகளை நாம் கடக்கும்போது வாழ்க்கையில் படிப்படியாகவே முன்னேற்றம் இருக்கும் என்பதை உணர்த்தும் விதமாக இருப்பதாக ஐதீகமாக பார்க்கப்படுகிறது.