நாகப்பட்டினம்: ஆன்மீக ஒருமைப்பாட்டிற்கும், மத நல்லிணக்கத்திற்கும் உதாரணமாகத் திகழும் நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 469 வது ஆண்டு கந்தூரி விழா, கடந்த நவம்பர் 21-ஆம் தேதி, கம்பீரமான கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த மகத்தான விழாவின் முக்கிய நிகழ்வான நாகூர் ஆண்டவருக்குச் சந்தனம் பூசும் வைபவத்துக்காக, யாத்ரீகர்கள் சந்தனம் அரைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Continues below advertisement

கொடியேற்றத்துடன் துவங்கிய ஆன்மீகப் பயணம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நாகூர் ஆண்டவர் தர்கா, மதங்களைக் கடந்து அனைவரும் வந்து வழிபடும் ஒரு புனிதத் தலமாகும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ, பக்திப் பெருக்குடன் துவங்கிய இந்தக் கந்தூரி விழா, நாகூர் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகத்தின் பெருமைகளை நினைவு கூறும் வண்ணம் ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்படுகிறது.

கந்தூரி விழாவின் பிரதான நிகழ்வான, நாகூர் ஆண்டவருக்குச் சந்தனம் பூசும் வைபவம் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது. இதற்காக, நாகையிலிருந்து நவம்பர் 30 -ம் தேதி இரவு பிரம்மாண்டமான சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு, டிசம்பர் 1 -ஆம் தேதி அதிகாலை நாகூர் வந்தடைந்து, சந்தனம் பூசும் வைபோகம் நடைபெறும்.

Continues below advertisement

அரசு சார்பில் வழங்கப்பட்ட சந்தனம்

இந்த ஆண்டு கந்தூரி விழாவிற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் 45 கிலோ எடை கொண்ட உயர்தர சந்தன மரக் கட்டைகள் மரியாதையுடன் வழங்கப்பட்டுள்ளது. அரசின் இந்த உதவியானது, விழாவின் மகத்துவத்தையும், மத நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

வழங்கப்பட்ட இந்தச் சந்தன மரக் கட்டைகள் தற்போது, நாகூர் ஆண்டவர் சன்னதியின் பின்புறம் உள்ள பிரத்யேக இடத்தில் பாரம்பரிய முறைப்படி அரைக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சந்தனத்தை அரைக்கும் பணியானது, வெறும் ஒரு சடங்காக இல்லாமல், பக்தி மற்றும் அர்ப்பணிப்பின் சின்னமாக யாத்ரீகர்களால் முன்னெடுக்கப்படுகிறது.

பக்தி நிறைந்த சந்தனம் அரைக்கும் பணி

சந்தனம் அரைக்கும் பணி ஒரு கடுமையான விரதத்துடன் கூடிய பக்திச் சடங்காகக் கருதப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்திருக்கும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் பத்து நாட்கள் தர்காவிலேயே தங்கி, இந்தச் சந்தன மரக் கட்டைகளை அரைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

*துண்டாக்குதல்: முதலாவதாக, 45 கிலோ சந்தன மரக் கட்டைகள் பாரம்பரிய முறைப்படி சிறு சிறு துண்டுகளாக வெட்டப்படுகிறது.

*ஊறவைத்தல்: பின்னர் இந்தச் சந்தனத் துண்டுகள், நறுமணமிக்க ஜவ்வாது கலந்த பன்னீரில் பல மணி நேரம் ஊற வைக்கப்படுகின்றன. இது சந்தனத்திற்கு இயற்கையான நறுமணத்தையும், கூடுதல் குளிர்ச்சியையும் தருகிறது.

*அரைத்தல்: ஊற வைக்கப்பட்ட சந்தனக் கட்டைகள், பிரத்யேகமாகத் தயார் செய்யப்பட்ட கருங்கற்களில் கையால் தேய்ந்து அரைக்கப்படுகின்றன.

குழுக்களாக அமர்ந்து, அல்லாவின் நாமத்தைப் பரவசத்துடன் உச்சரித்தவாறு யாத்ரீகர்கள் இந்தச் சந்தனத்தை அரைக்கும் காட்சி, காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்துவதாக உள்ளது. இந்த அரைக்கும் பணி இரவும் பகலும் அயராது நடைபெற்று வருகிறது.

சந்தனம் அரைக்கப்படும்போது எழும் தெய்வீக மணமானது, தர்கா வளாகம் முழுவதையும் நிரப்பி, அங்கு வரும் பக்தர்களுக்கு ஆன்மீக அமைதியையும், புத்துணர்வையும் அளிக்கிறது.

சந்தனக்கூடு ஊர்வலம் மற்றும் சந்தனம் பூசும் நிகழ்வு 

அரைத்து முடிக்கப்பட்ட, பன்னீர் மற்றும் ஜவ்வாது கலந்த இந்த புனிதச் சந்தனம், பிரத்யேகமான குடங்களில் நிரப்பப்படும். பின்னர் இந்தக் குடங்கள் அனைத்தும் நாகப்பட்டினம் முஸ்லிம் ஜமாத்தார்களிடம் மிகுந்த மரியாதையுடன் ஒப்படைக்கப்படும்.

நாகை நகரில் அமைந்துள்ள யாஹூசைன் பள்ளி வாசலில் இருந்து, உலகப் புகழ் பெற்ற சந்தனக்கூடு ஊர்வலம் நவம்பர் 30 -ஆம் தேதி இரவு வெகு விமரிசையாகப் புறப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ, மேள தாளங்கள், வான வேடிக்கைகள் மற்றும் பக்திப் பாடல்களுடன் புறப்படும் இந்த ஊர்வலம், இரவு முழுவதும் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து, டிசம்பர் 1-ஆம் தேதி அதிகாலை நாகூர் தர்காவை வந்தடையும்.

தர்காவின் தலைமாட்டு வாசலில் சந்தனக் குடங்கள் இறக்கப்பட்டு, மிகுந்த பக்திச் சிரத்தையுடன் தர்கா சன்னதிக்குள் கொண்டு செல்லப்படும். அங்கு, நாகூர் ஆண்டவர் ஹஸ்ரத் ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகத்தின் மக்பராவிற்குப் (சன்னதிக்கு) பாரம்பரிய முறைப்படி புனிதச் சந்தனம் பூசும் வைபவம் நடைபெறும்.

சந்தனம் பூசப்பட்ட பிறகு, அந்தப் புனிதச் சந்தனம் யாத்ரீகர்களுக்கும், பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படும். இந்தச் சந்தனப் பிரசாதம் சகல நோய்களையும் நீக்கி, அமைதியையும், ஆசீர்வாதத்தையும் தரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.