தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முறையான காலத்தில் தொடங்கி சரியாகப் பெய்து வருகிறது. அதன் விளைவாக கர்நாடகம் முழுவதும் அதிகமழை பெய்து அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பியது. அதன் காரணமாக காவிரியில் வரும் நீர் முழுவதும் அப்படியே தமிழகத்திற்கு கர்நாடகம் அனுப்பி வைத்தது. அதனால் கடந்த மாதம் 16 -ம் தேதி மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. அதனைத்தொடர்ந்து அணைக்கு வந்த மொத்த நீரும் அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்டதால் ஒன்றரை லட்சம் கன அடி அளவிற்கு நீர் காவிரியில் பெருக்கெடுத்து வந்தது. ஆற்றின் இருபுறமும் சேதங்களை ஏற்படுத்தி கொள்ளிடம் ஆறு வழியாக கடலுக்குள் சென்று கலந்தது. அதனைத் தொடர்ந்து இந்த மாத இரண்டாவது வாரத்தில் மீண்டும் கர்நாடகத்திலிருந்து ஒன்றரை லட்சம் கன அடி அளவிற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இப்போதும் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவில் இருந்ததால் மொத்த நீரும் அப்படியே காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் வழியாக கடலுக்கு அனுப்பப்பட்டன.
அதில் இரண்டு ஆறுகளின் கரையோரம் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டார்கள். பல்லாயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாழாகியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கர்நாடகத்தில் மீண்டும் கனமழை தொடங்கி பெய்து வருகிறது. இதனால் மைசூரு-பெங்களூரு இடைப்பட்ட பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடாய் மிதக்கின்றன. அதனால் அந்த நீர் முழுவதும் காவிரியில் திறந்து விடப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக 50 ஆயிரம் கன அடியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்த நீர் வரத்து நேற்று முதல் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் உயர்ந்தது. அது அப்படியே காவிரியில் அனுப்பப்பட்டு வருகிறது. அதனை ஒட்டி காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் கரையோரம் உள்ள 14 மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அது மேலும் 2.12 லட்சம் கனஅடியாக உயரும்போது பல கரையோர கிராமங்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
மேட்டூரில் திறக்கப்படும் நீரோடு தமிழகத்தில் பெய்யும் மழை நீரும் சேர்ந்தால் சுமார் 3 லட்சம் கனஅடி நீர்வரையிலும் கொள்ளிடம் ஆறு வழியாக கடலுக்கு அனுப்பப்படும் என்று தெரிகிறது. மூன்று லட்சம் கன அடி நீரை கொள்ளிடம் ஆறு தாங்குமா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. பலவீனமாக இருக்கும் கொள்ளிடம் ஆறு இந்த வெள்ளத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் அதன் கரைகள் உடைந்தால் மேலும் பல கிராமங்கள் முற்றிலுமாக அழிந்து பாழாகும் கூடும் என்று மக்கள் அச்சத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக இப்படி வெள்ளம் பெருக்கெடுத்திருப்பது தங்கள் வாழ்வாதாரத்தை அழித்து விட்டது என்று வேதனையோடு சொல்கிறார்கள் கரையோரம் உள்ள கிராம மக்கள். இந்நிலையில் இன்று மாலை நிலவரப்படி கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு 2.12 லட்சம் கன அடியாக உயர்ந்திருக்கிறது. இந்த நீர் நாளை இரவுக்குள் மேட்டூரை வந்தடையும். தற்போது மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் 1.80 லட்சம் கன அடி நீர் பெரும் வெள்ளமாக கொள்ளிடத்தில் ஆறு வழியாக கடலுக்கு சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட ஒரு லட்சத்திற்கும் மேலான உபரி நீர் கீழணை வழியாக கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆற்றுப்படை கிராமமான நாதல்படுகை கிராமத்தை வெள்ளநீர் சூழ்ந்து அங்குள்ள வீடுகள் மற்றும் சாலைகளை கடந்து ஆர்ப்பரித்து தண்ணீர் வேகமாக செல்கிறது. இருப்பினும் மேடான பகுதி உள்ள மக்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை ஒட்டி அப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சுந்தர விநாயகர் கோயிலுக்கு விநாயகர் சிலையை பூஜை செய்வதற்காக இளைஞர்கள் வாங்கி வந்ததை அடுத்து ஆற்றின் வெள்ளத்தை பொருட்படுத்தாமல் சாலை கடந்து செல்லும் வெள்ளநீரில் விநாயகரை ஊருக்குள் எடுத்துச்சென்று பிரதிஷ்டை செய்துள்ளனர். வழக்கமாக வழிப்பாட்டிக்கு பின்னர் கோயிலில் இருந்து ஆற்றுக்கு எடுத்து சென்று விநாயகர் சிலையை கரைக்கும் சூழலில் இந்தாண்டு விநாயகர் சிலை இருக்கும் கோயில் அருகே ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக காவிரி ஆறு வந்துள்ளது.