உலகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி மிக விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று அதிகம் பரவி வந்ததால் விநாயகர் சதுர்த்திக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நோய் தொற்று குறைந்து காணப்படுவதால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை வாங்குவதற்கு சந்தைகளில் மக்கள் குவிந்துள்ளனர். சேலம் மாநகராட்சியில் 2,000 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ராஜ கணபதி திருக்கோவிலில் காலை 4 மணி முதல் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ராஜ கணபதிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் இந்த ஆண்டு முதல் தமிழ் மாதங்களில் முதல் நாள் அன்று ராஜகணபதி கோயிலில் உள்ள விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்படும் என திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தெருக்களிலும் வீதிகளிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. 



இன்று லட்சக்கணக்கான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய உள்ளதால் சேலம் மாவட்டம் முழுவதும் அசம்பாவிதங்கள் இல்லாமல் தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் தற்காலிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று நாட்களுக்குப் பிறகு இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சேலம் எல்லை பிடாரியம்மன் கோயில் அருகே தொடங்கி வின்சென்ட், அஸ்தம்பட்டி, சின்னத்திருப்பதி வழியாக கன்னங்குறிச்சி ஏரி சென்றடையும். மற்றொரு ஊர்வலம் சேலம் மாநகராட்சி வள்ளுவர் சிலை அருகில் தொடங்கி சின்ன கடைவீதி, பெரிய கடைவீதி, ராஜகணபதி கோயில், இரண்டாம் அக்ரஹாரம், பட்டைக்கோவில், அம்மாபேட்டை வழியாக சென்று குமரகிரி ஏரியில் கரைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் கலந்து கொள்ள உள்ளதால் பாதுகாப்பு பணியில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 



 


விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பாஜகவின் விவசாய அணி சார்பாக தமிழக பாரம்பரிய கொழுக்கட்டை திருவிழா நடைபெற்றது. இயற்கையான தானியங்களைக் கொண்டு 108 வகையான கொழுக்கட்டைகளை தயார் செய்து கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தனர். மேலும் பாரம்பரிய இயற்கை தானியங்களை கொண்டு கொழுக்கட்டைகள் தயார் செய்வது குறித்து மக்களுக்கு விளக்கம் அளித்தனர். குறிப்பாக பாரம்பரிய இயற்கை தானியங்களை மீட்டெடுக்கவும் அதேபோன்று இயற்கை விவசாயத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த முயற்சியை ஈடுபட்டதாக கொழுக்கட்டை கண்காட்சி நடத்திய பார்த்தசாரதி தெரிவித்தார். குறிப்பாக கோதுமை மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி, ராகி, பூங்கார் அரிசி, கருப்பு கவுனி, சிகப்பரிசி, பச்சரிசி உள்ளிட்ட தானியங்களை கொண்டு 108 வகையான கொழுக்கட்டைகளை தயாரித்து கண்காட்சியில் காட்சிப்படுத்தினர். இதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் நேரில் வந்து பார்த்து வியந்தனர்.