தஞ்சாவூர்: இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரமலான் விளங்குகிறது. இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும்.
ரமலான் மாதம் முழுவதும் 30 நாட்களுக்கு நோன்பு கடைபிடிக்கப்படும். இதையடுத்து பிறை தெரிந்ததும் அடுத்த நாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அதன்படி நேற்று முன்தினம் பிறை தெரிந்ததை முன்னிட்டு நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு தஞ்சை மாநகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தஞ்சை கீழவாசல் அறிஞர் அண்ணா திருமண மண்டபம் முன்பு (உருது ஸ்கூல் திடல்) ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை மாநகர கிளை தலைவர் அப்துல்லா, செயலாளர் ஜியாவூதீன், பொருளாளர் சலீம், நிர்வாகிகள் முகமது முஸ்தபா, காலித், செய்யது முஸ்தபா, மாவட்ட மாணவரணி செயலாளர் யாசர் அராபத் ஆகியோர் சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு தொழுகையில் கிளை இமாம் மாவட்ட பேச்சாளர் சேக் அப்துல் காதர், ரமலான் மாதம் நோன்பு குறித்தும், பண்டிகையின் நோக்கம் குறித்தும் பேசினார்.
இந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமிய ஆண்கள், பெண்கள், சிறுவர்-சிறுமிகள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். முடிவில் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், அய்யம்பேட்டை, கபிஸ்தலம், சக்கராப்பள்ளி, பண்டாரவாடை, வழுத்தூர், இராஜகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்களின் ஈகைத் திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையினை இஸ்லாமியர்கள் கொண்டாடினர்.
சிறப்பு தொழுகையில் ஆண்கள் மற்றும் பெண்கள் என ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரம்ஜான் பெருநாள் வரும் இந்த மாதமே, இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரகவாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.
நன்மை, தீமைகளைப் பிரித்து அறிவிக்கும் குர்ஆன் உலகிற்கு இறைவனால் வழங்கப்பட்டதும் இந்த மாதம் என்பதால் இந்த மாதம் முழுவதும் நோன்பு இருந்து, ஏழை எளியவர்களுக்கு தர்மங்கள் செய்து, ரம்ஜான் பண்டிகையினை இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர்.
புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். மேலும் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்றன.