தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு சங்கரப்பேரி விலக்கு பகுதியில் உள்ள திடலில் 4-வது புத்தகத் திருவிழா நடக்கிறது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு புத்தக திருவிழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஒவ்வொரு அரங்கமாக சென்று விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த புத்தகங்களை பார்வையிட்டார்.




அதனை தொடர்ந்து தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டு உள்ள அரங்கையும் திறந்து வைத்தார். மேலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10, 12-ம் வகுப்பு முடித்த தேர்வு செய்யப்பட்ட 20 மாணவ, மாணவிகளுக்கு காமராஜர் விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம், 12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.20 ஆயிரத்துக்கான காசோலையும் கனிமொழி எம்.பி. வழங்கினார்.




இந்த புத்தக திருவிழாவில் 110 அரங்குகளில் புத்தக பதிப்பகத்தாரின் அரங்குகளும், 10 அரசு துறை அரங்குகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த திருவிழா வருகிற 01.05.2023 வரை 11 நாட்கள் நடக்கிறது. புத்தகத் திருவிழாவுடன் சேர்ந்து வருகிற 28-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை நெய்தல் கலைத்திருவிழாவும் கோலாகலமாக நடக்கிறது. இதில் நமது பாரம்பரிய உணவு வகைகளையும் அறிந்து கொள்ளும் வகையில் 40 அரங்குகளுடன் உணவுத்திருவிழாவும் நடக்கிறது.




பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி.,தூத்துக்குடியில் 4-வது புத்தக திருவிழா தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டும் புத்தக திருவிழாவில் மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். அதே போன்று இந்த ஆண்டும் புத்தக திருவிழாவில் மக்கள் அதிக அளவில் பங்கேற்பார்கள். புத்தக திருவிழாவில் 110 புத்தக பதிப்பகத்தார் அரங்குகள் அமைத்து உள்ளனர். இதில் சுமார் 1 லட்சத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இந்த புத்தக திருவிழாவுக்கு தொடர்ந்து மக்கள், மாணவர்கள் ஆதரவு தேவை. வாசிப்பு பழக்கம் என்பது இன்னும் அதிகாக பரவலாகும் போதுதான், சமூகம் விழித்து இருக்கும் சமூகமாக, தன்னை உணர்ந்து இருக்க கூடிய சமூகமாக மாற முடியும். இந்த நாட்டை திசை மாற்றி வளர்த்தெடுத்து இருக்க கூடிய தலைவர்கள் அத்தனை பேரும் சிந்தனையாளர்களாக, வாசிப்பு பழக்கம் உள்ளவர்களாக இருந்து உள்ளார்கள். ஆகையால் புத்தக கண்காட்சிக்கு இளம் தலைமுறையினர் அதிக அளவில் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டும்.




மேலும் நம் மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை பகுதியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பிரத்யேக தொல்லியல்துறை அரங்கமும் அமைக்கப்பட்டு உள்ளது. அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடத்தில் இருந்து எவ்வாறு பொருட்கள் எடுக்கப்படுகிறது, அங்கு இருந்து கிடைத்து உள்ள பொருட்கள் உள்ளிட்டவையும் கண்காட்சியில் வைக்கப்பட்டு உள்ளன. முதல் முறையாக தூத்துக்குடியை பற்றிய புகைப்பட கண்காட்சியும், புகைப்பட போட்டியும் நடத்தப்படுகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் எடுத்து உள்ள புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட உள்ளன. இதில் சிறந்த புகைப்படங்களை தேர்வு செய்வதற்காக திரைப்பட இயக்குனர் ராஜீவ்மேனன் முன்வந்து உள்ளார். அவர் தேர்வு செய்யும் படங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.


புத்தக கண்காட்சிக்கு மக்கள் சிரமப்படாமல் வந்து செல்வதற்கு வசதியாக இலவசமாக பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. இதற்காக தனியாக பஸ் நிறுத்தமும் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த ரோட்டில் செல்லும் அனைத்து பஸ்களும் புத்தக திருவிழா நடைபெறும் இடம் அருகே நின்று செல்லும். கோவில்பட்டி, திருச்செந்தூர், எட்டயபுரம் ஆகிய 3 இடங்களில் புத்தக கண்காட்சியில் நடைபெறும் நிகழ்வுகள், கலைநிகழ்ச்சிகள் அந்தந்த பகுதியில் உள்ள எழுத்தாளர்கள், கலைஞர்கள் மூலம் நடக்கிறது. தொல்லியல்துறை மூலம் அகழ்வாராய்ச்சி செய்து எடுக்கப்படும் பொருட்களை காட்சிக்கு வைப்பதற்காக, தமிழக அரசு சார்பில் பொருநை என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதே போன்று நெய்தல் கலை விழா வருகிற 28-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை நடக்கிறது. இந்த திருவிழாவில் சுமார் 400 கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர் என்றார்.