தஞ்சாவூர்: தஞ்சை அருகே திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில் குரு பகவானுக்கு நேற்று குரு பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.




 


தென்திட்டையில் உள்ள தொன்மையான கோயில்


தஞ்சை அருகே திட்டை என்று அழைக்கப்படும் தென்திட்டையில் வசிஷ்டேஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. வெட்டாறு, வெண்ணாறு ஆகிய ஆறுகளில் நடுவே அமைந்த திட்டு என்பதால் திட்டை என்று பெயர் வந்தது. தமிழகத்தின் தொன்மையான கோவில்களில் ஒன்றான இக்கோவில், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும். வசிஷ்ட முனிவரால் பூஜிக்கப்பட்டதால் வசிஷ்டேஸ்வரர் சுயம்புவாக தோன்றியதால் தான் தோன்றீஸ்வரர் என்ற பெயர் பெற்றது. இந்த கோவிலில் வசிஷ்டேஸ்வரர், சுகந்தகுந்தளாம்பிகை சன்னதிகளுக்கு நடுவில் எங்கும் இல்லாத சிறப்போடு தனி சன்னதியில் குருபகவான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.


குருபகவானுக்கு உரிய நிறம் மஞ்சள்


மஞ்சள் குரு பகவானுக்கு உரிய நிறம் அதனால்தான் மஞ்சள் நிற வஸ்திரம் சாத்துவார்கள். பீதாம்பரம் என்று அழைப்பதும் இதனால்தான். உலோகங்களில் பொன்னும், நவரத்தினங்களில் புஷ்ப ராகமும் இவருக்கு உரித்தானவை.

அரசாங்க கெளரவம், நண்பர்கள், உடலில் உண்டாகும் வீக்கம், சேமிப்பு, எதிர்பாராத வரவு இவையெல்லாம் குருவின் தன்மையால் ஏற்படுபவை. குரு பகவானின் திருவருள் கைகூடி வியாழக்கிழமைகளில் சரக்கொன்றை மற்றும் வெண் முல்லை மலர்களால் அர்ச்சிப்பது விசேஷம் பலனை அளிக்கும்.




முறையான வழியில் வரும் வெற்றிகளுக்கு காரணமானவர்


அன்ன வாகனத்தில் உலா வரும் இந்த தேவகுரு பஞ்சபூதங்களில் ஆகாயத்தைக் குறிப்பவர். முறையான வழியில் வரும் வெற்றிகளுக்குக் காரனான இந்த தேவகுரு, வாழ்வின் இன்பங்களுக்குக் காரணமானவர். சாஸ்திர அறிவு, சட்டம், நீதித்துறை ஆகியவற்றின் சிறப்படைய குருவே காரணம். வடக்கு மற்றும் வடகிழக்கு திசைகளுக்கு உரியவரான குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதி. கடகத்தில் உச்சமும் மகரத்தில் நீசமும் அடைபவர்.


திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி


ஒவ்வொரு ஆண்டும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைவதையொட்டி வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறும். அதன்படி நேற்று (புதன்கிழமை) மாலை 5.19 மணிக்கு குருபகவான் மேஷராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.

இதனை முன்னிட்டு திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் நேற்று குருபெயர்ச்சி விழா நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே திட்டை கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். பக்தர்கள் சிரமமின்றி குருபகவானை தரிசனம் செய்யும் வகையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு முன்னேற்பாடு செய்யப்பட்டிருந்தன.  மேலும் ஏராளமான போலீசார் கோவில் வளாகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள்


பக்தர்கள் வசதிக்காக திட்டைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை போன்ற அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன. பக்தர்களின் கார், மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவதற்காக தனியாக இடவசதி செய்யப்பட்டுள்ளன.

குருப்பெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிக்காரர்களுக்காக வரும் 6ம் தேதி கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை, 7 மற்றும் 8ம் தேதிகளில் பரிகார ஹோமம் நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.