இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகையாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை ரமலான் பண்டிகை என்றும் குறிப்பிடுவார்கள். ரம்ஜான் மற்றும் ரமலான் பண்டிகை என்று கூறினாலும், அடுத்தவருக்கு உதவும் பண்பை வளர்க்கும் விதமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையை ஈகைத் திருநாள் என்றே இதை கூறுகின்றனர். தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை ஏப்ரல் 10ம் தேதி கொண்டாடப்படுகிறது.


நோன்பு:


இஸ்லாமியர்களின் நாட்காட்டியின்படி, அதில் வரும் 9வது மாதம் ரமலான் மாதம் ஆகும். இஸ்லாமியர்களின் 5 கடமைகள் கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்ஜூ ஆகும். இதில் 3வது கடமையான நோன்பு ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்களால் கடைபிடிக்கப்படுகிறது.


இஸ்லாமியர்களின் முக்கிய கடமையாக ரமலான் மாதம் நோன்பிருத்தல் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நோன்பில் சூரியன் உதிப்பது முதல் சூரியன் மறையும் வரை உணவு, நீர் எடுத்துக்கொள்ளாமல் எச்சிலை கூட விழுங்காமல், தீய செயல்களில் ஈடுபடாமல் நோன்பு இருப்பது இஸ்லாமியர்களின் கடமையாக உள்ளது. உடல் மட்டுமின்றி, மனதளவிலும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே நோன்பு இருக்கப்படுகிறது.


ரமலான் மாதம் ஏன் சிறப்பு?


இந்து புராணங்களில் சொர்க்கவாசல் என்று அழைக்கப்படுவது போலவே, இஸ்லாமியர்களின் புனித நூலான குரானில் சொர்க்கவாசல் பற்றி கூறப்பட்டுள்ளது. சொர்க்கவாசல் என்பதை ரய்யான் என்று கூறுவார்கள். ரமலான் மாதத்தில் நல்ல குணங்களுடன் நோன்பு இருப்பவர்கள் மட்டுமே இந்த ரய்யான் வழியாக அழைத்துச் செல்லப்படுவார்கள் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை ஆகும்.


மேலும், இந்த ரமலான் மாதமானது நரகத்தின் வாசல்கள் மூடப்பட்டு சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் என்றும், இஸ்லாமியர்களின் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும் என்றும், அதிகளவில் நன்மைகள் செய்ய வேண்டிய மாதம் என்றும், அல்லாஹ்வை நெருங்கும் வாய்ப்பை அதிகளவில் தரும் மாதம் என்று ரமலான் மாதத்திற்கு ஏராளமான சிறப்புகள் உண்டு.


ஈகைப்பண்பு:


7 வயது முதலே இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு மேற்கொள்ளலாம். வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள், உடல்நலம் குன்றியவர்கள், நீண்டதூர பயணம் மேற்கொள்பவர்கள் நோன்பு இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.  ஏராளமான சிறப்பம்சங்கள் கொண்ட ரமலான் மாதத்தில் நோன்பிருக்காமல் தீய வழியில் செல்பவர்கள் மற்றும் எந்த நன்மையும் செய்யாதவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்கக்கூட தகுதியவற்றவர் என்று சொல்லப்பட்டுள்ளது.


ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பிருந்து ஈகைத் திருநாளில் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை இறைவனுக்கு படையலிடுவார்கள். அதை மூன்று பங்காக இடுவார்கள். அதில் ஒரு பங்கை நண்பர்களுக்கும், மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் மற்றும் மூன்றாவது பங்கை தங்கள் தேவைக்கும் வைத்துக் கொள்வார்கள். அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்ற அடிப்படைத் தத்துவத்திலே ஈகைத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்கள் அந்த நாளில் பிரியாணி செய்து அதை நண்பர்களுக்கு வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.


மேலும் படிக்க: அயோத்தி கர்ப்பகிரகத்தில் வைக்கப்படும் 147 கிலோ எடை, 522 பக்கங்கள்; உம்முடி பங்காரு தயாரித்த தங்கப் புத்தகம்


மேலும் படிக்க: தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்