இன்று ஏப்ரல் 17ம் தேதி ராம நவமியின் புனிதமான நாளாகும். இன்று ராம நவமியை முன்னிட்டு நாடு முழுவதும் ராமர் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. ராம நவமி என்பது ஒவ்வொரு ஆண்டும் சைத்ரா மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் ஒன்பதாம் நாளில் கொண்டாடப்படுகிறது.


வரலாற்றில் ராமர் பிறந்தநாள் இன்று: 


சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று சூர்ய வம்சத்தில் ராமர் அவதரித்தார். சில ஆண்டுகள் இந்த ராம நவமி பங்குனி மாதத்திலும் வரும். இந்த ஆண்டு தமிழ் மாதத்தின் கணக்கின்படி, சித்திரை 4ம் தேதி அதாவது ஏப்ரல் 17ம் தேதி (இன்று) ராம நவமி கொண்டாடப்படுகிறது. 


இன்றைய நாளில் 108 அல்லது 1008 முறை ஸ்ரீ ராம ஜெயம் எழுதி ராம நாமம் உச்சரித்தால் ராமரின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும், இந்த நாளின் ராமாயண கதை மற்றும் ராமரின் வரலாறு கேட்டாலோ, படித்தாலோ ராமர் நன்மையை தருவார் என்பதும் நம்பிக்கை. 


ராம நாமம்


’ரா’ என்று உச்சரிக்கும்போது வாய் திறக்கும், 'மா' என்று உச்சரிக்கும்போது வாய் மூடப்படும். இதன்மூலம் ஏற்படும் சக்திகள் உடலுக்குள் கடத்தப்படுவதாக ஐதீகம். அதனால்தான் ராமர் நாமத்தை உச்சரிப்பதால் அற்புதங்கள் நடக்கிறது என்று கூறப்படுகிறது. ராம நாமத்தை நாள்தோறும் உச்சரிப்பவர்கள் இறந்த பிறகு வைகுண்டத்தை அடைவார்கள் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. ராமர் என்ற பெயருடன் தொடர்புடைய பல பரிகாரங்களும் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளன. 


மனித உருவில் கடவுள்


இந்து மதத்தில் சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா போன்ற கடவுள்களும், சிறு தெய்வ வழிபாடுகளும் நிறைய உள்ளது. ஆனால், ராமர் விஷ்ணுவின் 7வது அவதாரமாக இந்த உலகத்தில் பிறந்தார் என்று கூறப்படுகிறது. எனவேதான், மனித உருவில் வணங்கப்படும் முதல் கடவுள் ராமர் என்று அழைக்கப்படுகிறார் என்பது ஐதீகம்.


ராமநவமி அனுஷ்டிக்கப்படும் இந்த புனிதமான நாளில், ராமர் தொடர்பான முக்கியமான விஷயங்களை இங்கு தெரிந்துகொள்வோம்.  


ராமநவமி எப்போது தொடங்கி எப்போது முடிகிறது? 



  • உதய திதியின் படி, ராம நவமி விழா இன்று (ஏப்ரல் 17ம் தேதி) கொண்டாடப்படுகிறது.

  • இந்து நாட்காட்டியின்படி, சைத்ரா மாதத்தின் நவமி திதி ஏப்ரல் 16ம் தேதி (நேற்று) மதியம் 1:23 மணிக்கு தொடங்கி (இன்று) ஏப்ரல் 17ம் தேதி மாலை 3:15 மணிக்கு முடிவடைகிறது. 


ராமரை இன்று வழிபடுவது எப்படி? 


இன்று காலை குளித்த பிறகு, சுத்தமான ஆடைகளை அணித்து சூரிய பகவானுக்கு ஒரு குவளை நீரை சமர்பிக்க வேண்டும். அதன்பிறகு குழந்தை வடிவில் உள்ள ராமர், பரதர், லட்சுமணன் மற்றும் சத்ருகன் ஆகியோர் படத்தை வைத்து அதில், மலர்கள் அல்லது மாலைகளால் அலங்காரம் செய்ய வேண்டும். தொடர்ந்து, சந்தனம், பூக்கள், பஞ்சாமிர்தம், துளசி இலைகள், பழங்கள் வைத்து பூஜை செய்ய வேண்டும். அதில், இனிப்பு பலகாரங்கள் வைத்து பூஜை செய்வதும் நன்மை பயக்கும். பின்னர், ராம நாமம் துதித்து நெய் தீபம் அல்லது கற்பூரம் கொண்டு ராமருக்கு ஆரத்தி செய்து, பிரசாதத்தை பிறகுக்கு வழங்கினால் ராமர் அருள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. 


நிலவும் நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே இக்கட்டுரை எழுதப்பட்டது என்பதும், வழிபாடு குறித்த நிபுணத்துவ அறிவுரைகள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.