சித்திரைத் திருவிழாவில் லட்சக்கணக்கான கூட்டத்தில் காவல்துறை முதல் குழந்தைகள் வரை அனைவரும் பலன் பெறும் விசிறியை அனுமதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

சித்திரைத் திருவிழா 2024


 

உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழாவில் மதுரை மீனாட்சி தேர்த்திருவிழா, மதுரை மீனாட்சி திருக்கல்யாணம், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் ஆகியவை முக்கிய திருவிழாக்கள் ஆகும்.  இந்த விழாக்களை காண மதுரையில் இருந்து மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவர். அதேபோல் பாதுகாப்பு கருதி ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பர். சித்திரைத் வெயில் உச்சியில் இருக்கும் தருணத்தில் கூட்ட நெரிசலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முண்டியடித்து கொள்வர். அத்தகைய தருணத்தில் பல பக்தர்கள் மூச்சு விட சிரமப்பட்டு மயங்கி விழுவார்கள். உச்சி வெயிலிலும், கூட்ட நெரிசலிலும் காவல்துறையினரும் தங்களது பாதுகாப்பு பணியை சிரமத்துடன் மேற்கொள்வார்கள். 

 

அனுமதிக்க கோரிக்கை


 

அத்தகைய தருணத்தில் இவர்கள் அனைவரும் ஆசுவாசப்படும் விதமாக 7 அடி உயர விசிறியை கொண்டு சேவகர்கள் விசிறி வீசி வருவார்கள். சுமார் 30க்கும் மேற்பட்டோர் இந்த சேவையை பாரம்பரியமாக செய்து வருகின்றனர். சமீப காலமாக இவர்களை தேர் திருவிழாவிலும், வைகை ஆற்றிலும் அனுமதிக்காமல் தடை செய்யப்பட்டு வருவதாக புகார் கூறி விசிறி சேவா சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும் மனு அளித்தனர்.  இதுகுறித்து விசிறி சேவா சங்கத்தினர் கூறுகையில், நாங்கள் 10 பைசா வாங்காமல் இதை பாரம்பரியமாக தங்கள் தாத்தா காலத்திலிருந்து சேவையாக செய்து வருகிறோம். வைகை ஆற்றில் கள்ளழகரை வீரராக பெருமாள் சுத்தி வரும்போது தாங்களும் சுத்தி வருவது பாரம்பரியம். ஆனால் சமீப காலமாக எங்களை ஆற்றுக்குள் அனுமதிக்காமல் அலைக்கழித்து வருகின்றனர்.  கூட்ட நெருசில் சிக்கி இருக்கும் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களுக்கும் தாங்கள் விசிறி வீசுவது மிகப்பெரிய உதவியாக இருக்கும். காவல்துறையினர் சிறிது நேரம் எங்களுக்கு வீசங்கள் என்று கேட்டு வாங்கி வீசச் சொல்வார்கள். அதேபோல் கூட்ட நெரிசல்களில் சிக்கி இருக்கும் குழந்தைகளும் பெண்களும் தங்களுக்கு வீச சொல்லி கேட்பார்கள். எந்தவிதமான பலனும் எதிர்பார்க்காமல் மீனாட்சி அம்மனுக்கும், அழகு மலையனுக்கும் செய்யும் சேவையாகவே இதை காலம் காலமாக செய்து வருகிறோம்.

 

ஏசி வந்துவிட்டது - விசிறி தேவையில்லை


 

லட்சக்கணக்கான பக்தர்களுக்கு வெறும் 30 பேர் காலம் காலமாக ஏழடி உயர விசிறியை  தூக்கி சிரமம் பாராமம் சேவையாக வீசி வருகிறோம். சமீபகாலமாக தங்களுக்கு உரிய அனுமதி வழங்காமல் அலைக்கழிப்பது வருத்தத்தை அளிக்கிறது. எங்களை ஏன் அனுமதிக்க மாட்டீர்கள் என கேட்டதற்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் ஏசி வந்துவிட்டது எனவே விசிறி தேவையில்லை என கூறியும், ஆற்றுக்குள் விஐபி-களுக்கு மட்டுமே அனுமதி என கூறியும் எங்களை புறக்கணிக்கின்றனர். பாரம்பரியமாக விசிறி சேவை செய்து வரும் இந்த கலாச்சாரம் காலப்போக்கில் அழிந்து விடும் என்பதால், இது தொடர்பாக கடந்த வருடமும் மனு கொடுத்தோம், இந்த வருடமும் மாவட்ட ஆட்சியரிடமும், காவல்துறையினிடமும் மனு அளித்துள்ளோம். எங்களுக்கு பெரிதாக எந்த அங்கீகாரமும் தேவையில்லை எங்களுக்கு அனைத்து இடத்திலும் சேவை செய்யும் சுதந்திரத்தை முழுதாக கொடுத்தாலே போதும் என கூறினர்.