புரட்டாசி மாதம் நாளை பிறக்கிறது. தமிழ் மாதங்களில் ஆன்மீக மணம் நிறைந்த மாதம் புரட்டாசி மாதம் ஆகும். புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதம் ஆகும்.

புரட்டாசி மாதம்:


புரட்டாசி மாதத்தில் உள்ள அனைத்து நாட்களிலுமே வைணவ தலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். எத்தனையோ தெய்வங்கள் இருந்தும் புரட்டாசி மாதம் ஏன் பெருமாளுக்கு உகந்த மாதமாக திகழ்கிறது? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கலாம். அதற்கான பதிலை கீழே விரிவாக காணலாம்.


புதன் பகவான் அவதரித்தது இதே புரட்டாசி மாதத்தில்தான் ஆகும். ஜோதிட சாஸ்திரப்படி, ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால் மட்டுமே அவரது தொழில், குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஜாதகங்களிலும் புதன் வலுவில்லாததால் பலரும் சிரமத்தை சந்திப்பார்கள் என்று ஜோதிட அறிஞர்களும் கூறுவார்கள்.


பெருமாளுக்கு உகந்தது ஏன்?


ஒருவரின் வாழ்வில் ஏற்றத்தையும், மாற்றத்தையும் தரும் புதன் பகவானுக்கே அதிபதியாக, அதிதேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு. அந்த புதன் பகவானின் அதிதேவதையான மகாவிஷ்ணுவை, புதன் அவதரித்த புரட்டாசி மாதத்தில் வழிபட்டால் வாழ்வில் உள்ள சங்கடங்களும், கஷ்டங்களும் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும்.


மேலும், இதே புரட்டாசி மாதத்தில்தான் சனி பகவானும் சனீஸ்வரன் எனும் பட்டம் பெற்றார். ஒருவரின் வாழ்வில் சந்திக்கும் அத்தனை ஏற்றம் மற்றும் தாழ்வுகளுக்கு சனி பகவானின் ஆட்சி மிகப்பெரிய காரணம் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது. அப்பேற்பட்ட சனி பகவானின் ஆசி பெறுவதற்காகவும், சனிபகவானால் வாழ்வில் ஏற்படும் இன்னல்களில் இருந்து தப்பிப்பதற்காகவும் இந்த புரட்டாசி மாதத்தில் பெருமாளையும், சனி பகவானையும், பெருமாளையும் வணங்குகிறார்கள்.

வைணவ தலங்களில் ஏற்பாடுகள்:


சனி பகவானின் தோஷங்கள், இன்னல்களில் இருந்து நீங்குவதற்கு சனிக்கிழமை நாட்களில் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுவது வழக்கம். நாளை புரட்டாசி மாதம் பிறப்பதாலும், இந்த முறை பௌர்ணமி நன்னாளில் புரட்டாசி பிறப்பதாலும் கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.


இதனால், தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் களைகட்டி காணப்படும். திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உள்ளிட்ட கோயில்களில் புரட்டாசி வழிபாட்டிற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உலகப்புகழ்பெற்ற திருப்பதி கோயிலில் புரட்டாசி பிரம்மற்சோவ ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.