தமிழகத்தின் புகழ்பெற்ற முருகன் கோயில்களில் ஒன்றான மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரை அடுத்த திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். 


முருகப்பெருமான் சிவபூஜை செய்து பாவ விமோசனம் பெற்ற இடம்


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழி கிராமத்தில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. முசுகுந்த சக்கரவர்த்தியால் ஏற்படுத்தப்பட்ட இந்த கோயில் சூரபத்மனின் இரண்டாவது மகன் ஹிரண்யாசுரணை கொன்ற பாவம் நீங்க குரா மரத்தடியில் முருகப்பெருமான் சிவபூஜை செய்து பாவ விமோசனம் பெற்ற இடம் என்று தலபுராணம் கூறுகின்றது. பண்டைய தமிழ் நூல்களில் குராவடி என்ற பெயரில் வழங்கப்படும் இந்த ஆலயம், முருகனுக்கு உரிய பாவம் கழிந்ததால், திருவிடைக்கழி என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தின் புகழ்பெற்ற முருகன் கோயில்களில் இது ஒன்றாகும். 




1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அறுபடை வீடுகளுக்கு இணையான கோயில்


மிகவும் பிரசித்தி பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அறுபடை வீடுகளுக்கு இணையான சுப்பிரமணிய சுவாமி முருகன் கோயிலான இக்கோயில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட முருகப்பெருமானும், சிவபெருமானும் ஒன்றே என்ற அமைப்பில் அமைந்த ஒரே திருத்தலம் என்ற சிறப்புடையது, மேலும் பல்வேறு தனி சிறப்புகள் கொண்ட இக்கோயிலுக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.




21 ஆண்டுகளுக்கு பிறகு  கும்பாபிஷேகம்


பங்குனி உத்திரம், தைப்பூசம் போன்ற நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக இக்கோயிலுக்கு வந்து வழிபாடு செய்கின்றனர். ஏராளமான சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலுக்கு கடந்த 2003 -ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.  இந்நிலையில் 21 ஆண்டுகள் கழித்து மீண்டும் மகா கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு, கடந்த சில ஆண்டுகளாக கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதனைத் தொடர்ந்து கட்டிடங்கள் சீரமைத்தல், புதிய கட்டிடங்கள் கட்டுதல், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட கோயில் திருப்பணிகள் நடைபெற்று முடிவடைந்தது.




யாகசாலை பூஜைகள்


அதனை அடுத்து பூர்வாங்க பூஜைகள் தொடங்கப்பட்டு கடந்த 12 -ஆம் தேதி முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று  வந்து.  தொடர்ந்து கும்பாபிஷேக தினமான இன்று ஆறாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று,  பூர்ணாகதி மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து மேளதாள மங்கல வாத்தியங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்து, கோபுர கலசங்களை அடைந்தனர். தொடர்ந்து வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத மேள வாத்தியங்கள் இசைக்க கோயில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.




இதில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா, பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.முருகன் உள்ளிட்ட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து கும்பாபிஷேகத்தை கண்டு தரிசனம் செய்து வழிபாடு செய்தனர். கும்பாபிஷேகத்தை ஒட்டி மாவட்ட காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை  செய்திருந்தனர். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.