தஞ்சாவூர்: புதுக்கோட்டை மாவட்டம் பேரையூரில் அமைந்துள்ள நாகநாதர் கோயிலும் பக்தர்களுக்கும், சுற்றுலாப்பயணிகளுக்கும் மறக்கமுடியாத நினைவுகளை தரும் அற்புதமான இடம் என்றால் மிகையில்லை.


இந்த இடத்திற்கு புராண காலத்தில் செண்பகவனம், கிரிஷேத்திரம் என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோயில் மூலவர் நாகநாதர். தாயார் பிரகதாம்பாள். புதுக்கோட்டையிலிருந்து 10 மைல் தொலைவில் பொன்னமராவதி செல்லும் வழியில் பேரையூர் என்ற இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

 

சரிங்க... இதுல என்ன ஸ்பெஷல். இருக்கே. முதல் ஸ்பெஷல் இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். இங்குள்ள சுனையில் நீர்மட்டம் குறையும் பொழுது பக்கச்சுவரில் திரிசூலக்குறியொன்று காணப்படும். சூலத்திற்கு சரிமட்டத்தில் நீர் அமைந்திருக்கும் வேளையில் பங்குனி மாதம் மீன லக்னத்தில் சப்தம் எழுகிறது. இதுல என்ன ஸ்பெஷல். மற்ற நேரங்களில் நீர்மட்டம் சூலத்திற்கு சரிமட்டமாக இருந்தாலும் அந்த முழக்கம் கேட்பதில்லை. நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். இது உண்மைதான் மற்ற நேரத்தில் சூலத்திற்கு சரி மட்டத்தில் நீர் அமைந்திருந்தாலும் சப்தம் எழுவதே இல்லை.

 

அப்போ மற்றொன்று... இருக்கே... நாகநாதருக்கு பால் அபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாக மாறுகிறது. என்னது என்கிறீர்களா. உண்மைதான் ஒருமுறை விசிட் அடித்து பாருங்கள்.

 

இக்கோயிலில் ஆடிப்பூரத்தில் அம்பாளுக்கு கொடியேற்றி விழா நடக்கிறது. பங்குனி, சித்திரையில் நாகநாதருக்கு கொடியேற்றுவிழா நடைபெறுகிறது.

 

இந்த கோயிலுக்கு இருக்கும் மற்றொரு பெருமை இங்குள்ள நாகநாதரை வழிபட்டால் எண்ணியவை எண்ணியபடி நடக்கும். ராகுதோஷம் நீங்க திருநாகேஸ்வரம், கேது தோஷம் நீங்க காளஹஸ்திக்கு செல்வதற்கு பதிலாக பேரையூர் நாகநாதரைத் தரிசித்தால் 2 கிரகங்களின் தோஷங்களும் நீங்குகிறது. இப்படி இந்த கோயிலே மிகப்பெரிய ஸ்பெஷலாக அமைந்துள்ளது.

 

கம்பீரமான பெரிய மதிற்சுவர்கள். அதன்மீது வரிசையாகக் கல்நாகர்கள், கோயில் எதிரே திருக்குளம். உள்ளே பெரிய மண்டபம், கிழக்கிலும், மேற்கிலும் இருவாசல்கள், அதில் கோபுரங்கள் என்று சுற்றுலாப்பயணிகளை மனதை வெகுவாக ஈர்க்கிறது இக்கோயில்.

 

உள்ளே சென்றால் முதலில் காணப்படுவது "ஓம்' என்னும் வடிவில் அமைந்துள்ள புஷ்கரணி. இந்த புஷ்கரணி புண்ணிய புஷ்கரணியாகும். காரணம் இது ஒரு சுனைநீர் ஆகும். இங்கிருந்துதான் சுவாமிக்கு அபிஷேகத்திற்கு தீர்த்தம் எடுக்கப்படுகிறது. இந்த சுனையில்தான் முதல் ஸ்பெஷல் அமைந்துள்ளது. இந்த சுனையில் நீர்மட்டம் குறையும்பொழுது பக்கச்சுவரில் திரிசூலக் குறி தென்படுகிறது. சூலத்திற்கு சரிமட்டத்தில் நீர் அமைந்திருக்கும் போது பங்குனி மாதம் மீன லக்னத்தில் சப்தம் எழுகிறது. மற்ற நேரங்களில் நீர்மட்டம் சூலத்திற்கு சரிமட்டமாக இருந்தாலும் அந்த முழக்கம் கேட்பதில்லை. எப்படி? ஆச்சரியம்தானே. ஆனால் உண்மையும் அதுதானே.

 

கோயிலின் பிரகாரத்தில் பிரார்த்தனையாகச் செலுத்தப்பட்ட கல்லில் ஆன நாகர் சிற்பங்கள் உள்ளன. இதையடுத்து சமயக்குரவர்கள் நால்வரும் சேக்கிழார் பெருமானும் காட்சி தருகின்றனர். நவக்கிரக மண்டலத்தில் இறைவன், இறைவி இருவருக்கும் தனித்தனியே கொடிமரம் உள்ளது. இரண்டு இடங்களிலும் நந்தி உள்ளது.

 

பங்குனி மாதம் மீன லக்னத்தில் இங்கு அமைந்துள்ள சுனையிலிருந்து பேர நாதம் (மிருதங்க முழக்கம்) எழுவதால் பேரேஸ்வரம் என்று வழங்கப்படுகிறது. இதுவே பேரையூர் என்று மருவியுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது. நாகராஜன் வணங்கிய தலம். எனவே இறைவன் நாகநாதர் எனப்படுகிறார். நாகநாதருக்கு பால் அபிஷேகம் செய்வார்கள். பால் அவரது உடலில் பட்டவுடன் நீல நிறமாக மாறும் அதிசயத்தைக் காணலாம்.

 

சர்ப்பத்தினால் தான் இழந்த ஒளியை மீண்டும் பெறுவதற்கு சூரியபகவான் இங்கு வழிபட்டார் என்கிறது ஸ்தல வரலாறு. இப்படி ஆச்சரியங்களும், அதிசயங்களும் நிறைந்த இக்கோயிலை தேடி சென்று பாருங்கள். உங்களின் நினைவு புத்தகத்தில் பேரையூர் கோயில் அழுத்தமான இடத்தை பிடிக்கும்.