தஞ்சாவூர்:தஞ்சாவூர் பெரிய கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் கிரிவலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 


பௌர்ணமி நாளில் சிவபெருமானின் திருப்பெயரை உச்சரித்தல்


பொதுவாக பௌர்ணமி கிரிவலம்  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு வாய்ந்தாகும். அம்பிகைக்கு உகந்த பௌர்ணமி நாளில் சிவபெருமானை மட்டுமே மனதில் நினைத்து அவருடைய திருப்பெயரை உச்சரித்துக் கொண்டு பொறுமையாகவும், அமைதியாகவும் நடந்து செல்வதன்  மூலம் சிவபெருமானின் ஆசி நேரடியாக கிடைப்பதோடு பாவங்கள் நீங்கி சகலதோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். 




இந்த சிறப்பு வாய்ந்த நாளில் சிவபெருமானின் அருளைப் பெற திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலை நோக்கி பக்தர்கள் படையெடுப்பது வழக்கம். திருவண்ணாமலையை போல் தஞ்சாவூர் பெரிய கோயிலிலும் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் கிரிவலம் செல்ல  ஏற்பாடு செய்யப்பட்டது. 


மிகப்பெரிய கோயில்களில் இடம் பிடித்த தஞ்சை


ஒட்டுமொத்த இந்தியாவை எடுத்துக்கொண்டாலும் மிகப் பெரிய இந்துக் கோயில்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பிரபல இந்து கோயில்களைப் பட்டியலிட்டால், தமிழகத்திலிருந்து திருவரங்கம் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோவில், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயில், தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் கோயில் ஆகிய கோயில்கள் நிச்சயம் இடம்பெறும்.


ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்தபோது சோழநாடு வளமடைய ஆரம்பித்திருந்தது. பெரும் செல்வம் குவிய ஆரம்பித்தது. காஞ்சிபுரத்தில் ராஜசிம்மப் பல்லவனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில் ராஜராஜ சோழனை பெரிதும் கவர்ந்தது. "அதன் விளைவாகவே தஞ்சையில் ராஜராஜீச்சரம் எனும் பெருங்கோயில்" எழுந்தது என்று கூறப்படுகிறது.




2012ம் ஆண்டு நடந்த கிரிவலம்


பெரிய கோயிலில்  கடந்த 2012ம் ஆண்டு கிரிவலம் நடந்துள்ளது. அதன் பிறகு பக்தர்களின் நீண்ட ஆண்டுகள் கோரிக்கையை ஏற்று தஞ்சை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் கிரிவலம் நடத்துவதற்காக அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொட்ர்ந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலைப்  போல மாதந்தோறும் வரும் பௌர்ணமி நாளன்று மாலை 5 மணியிலிருந்து மறுநாள் காலை 6:00 மணி வரையும் கிரிவலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது‌. 


கிரிவல பாதைக்காக நடைபாதைகள் சீரமைப்பு


இதையடுத்து கிரிவலப் பாதைக்காக பெரிய கோவிலை சுற்றி உள்ள நடைபாதைகள் சீரமைக்கப்பட்டு மின்விளக்குகள் பொருத்தப்பட்டு  குடிநீர் வசதிகள் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில்
புரட்டாசி முதல் பௌர்ணமி நாளான நேற்று 17ம் தேதி பெரிய கோவிலில் வெகு விமர்சையாக கிரிவலம் துவங்கப்பட்டது.


பொதுவாக பெரிய கோவிலுக்கு இரவிலும் கூட தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். உலகப்புகழ் பெற்ற பெரியகோயிலை எந்த நேரத்திலும் தரிசனம் செய்துவிட வேண்டும் என்று பக்தர்கள் நினைப்பதுதான். இந்நிலையில் பௌர்ணமி கிரிவலம் முதல் நாளிலே முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில் பங்கேற்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பௌர்ணமி கிரிவலத்தை ஒட்டி ஏராளமான போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


எந்த நாளில் கிரிவலம் வந்தால் என்ன நன்மை?


பௌர்ணமி நாள் அன்று மட்டும்தான் கிரிவலம் வரவேண்டும் என்பதில்லை வருடத்தின் 365 நாளும் மலை வலம் வரலாம். ஞாயிற்று கிழமை கிரிவலம் வந்தால் சிவலோக பதவி கிட்டும். திங்கட்கிழமை கிரிவலம் வந்தால் இந்திர பதவி கிடைக்கும்.செவ்வாய்க்கிழமை கிரிவலம் வந்தால் கடன், வறுமை நீங்கும். புதன் கிழமை கிரிவலம் வந்தால் கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் கிடைக்கும். வியாழக்கிழமை கிரிவலம் வந்தால் ஞானம் கிடைக்கும். வெள்ளிக்கிழமை கிரிவலம் வந்தால் வைகுண்டப் பதவி கிடைக்கும். சனிக்கிழமை கிரிவலம் வந்தால் பிறவிப்பிணி அகலும். அஷ்டமி நாளில் கிரிவலம் வந்தால் தீவினைகள் போகும். குறிப்பாக செவ்வாய்க்கிழமை கிரிவலம் வருவது மிகவும் சிறப்பு.