பொதுவாக பறவைகளுக்கு காகம் சிட்டுக்குருவி,வீட்டில் வளர்க்கும் கிளிகள் மற்றும் புறாக்களுக்கு உணவளிப்பது என்பது, அனைத்து வயதினருக்கும் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு.உண்மையில் பறவைகளுக்கு உணவளிப்பதை அனைவரும் ரசிக்கிறார்கள். ஆனால்  புறாவோ அல்லது குருவியோ வீட்டிற்குள் கூடு கட்டும்போது, ​​அது நமக்கு வேலைகளையும் வைக்கலாம். 


பறவைகளின் எச்சம் மற்றும் அவை உண்ணும் உணவின் காரணமாக துர்நாற்றம் மற்றும் வீடு  அழுக்காகி விடுவதால்,பல பேர்  தங்கள் வீட்டில் கட்டப்பட்டுள்ள பறவைக் கூடுகளை அகற்றுவதை நாம் கவனித்திருக்கலாம். இது மட்டுமின்றி, அவை வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் ஏற்படும் என்பதும் பரவலாக நம்பப்படுகிறது. இது உண்மையா? வாஸ்து சாஸ்திரத்தில் இதற்கான பதில் என்னவாக இருக்கிறது என்பதை பார்ப்போம்.


அதிர்ஷ்டமே..


வீட்டில் புறா கூடு கட்டி இருக்கிறது என்பது ஒரு நல்ல சகுனமா அல்லது கெட்ட சகுனமா. வாஸ்து சாஸ்திரத்தின்படி, பறவைகள் வீடுகளில் கூடு கட்டுவது, மிகவும் மங்களகரமானதாகவும், அதிர்ஷ்டமாகவும் கருதப்படுகிறது. எனவே நீங்கள் எந்த கூட்டையும் அழிக்கக்கூடாது என்று வாஸ்து சாஸ்திரத்தில் உறுதியாக கூறப்பட்டுள்ளது. பறவைகளில் வருகை வாழ்க்கையின் அதிர்ஷ்டத்தையும், வாழ்வின் அடுத்த கட்ட முன்னேற்றத்தைக் குறிக்கிறது.


வீடுகளில் சிட்டுக்குருவி கட்டியிருக்கும் கூடானது 10 விதமான வாஸ்து குறைபாடுகளை அழிக்கும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.


எந்த வகை பறவை இனமாக இருந்தாலும் அதற்கு எதிர்மறை வைப்ரேஷன்கள் என கூறப்படும் எதிர்மறை ஆற்றல்களை உணரும் சக்தி உண்டு. அதே சமயத்தில் அதனால் நல்ல ஆற்றல்களை கிரகிக்கும் சக்தியும் உண்டு. எங்கு நல்ல ஆற்றல்கள் இருக்கிறதோ, அங்கு மட்டுமே அந்த பறவைகள் கூடுகட்டி வாழும், கெட்ட அதிர்வுகள் இருக்கும் இடங்களில் பறவைகள் நெருங்கக்கூட செய்யாது.


எனவே ஒருவருடைய வீட்டில் பறவைகள் கூடு கட்டுகிறது என்றால் அங்கு நல்ல அதிர்வுகள் உண்டு என்று அர்த்தம். அங்கு கெட்ட சக்திகள் இல்லாமல் தெய்வீக நடமாட்டம் இருப்பதை உணரலாம். அமைதியான சூழலில் மட்டுமே பறவைகள் கூடு கட்டுகின்றன, எனவே உங்களுடைய வீட்டில் அமைதியும், நிம்மதியும் நிறைந்து இருக்கும் பொழுது கட்டாயம் பறவைகள் தானாகவே வந்து கூடுகட்டி வசிக்கும்.


தேவ வாகனங்கள்


இந்து மதத்தை பொறுத்தவரை, அனைத்து தெய்வங்களுக்கும் ஏதாவது ஒரு வாகனம்,அது பறவையாகவோ அல்லது விலங்காகவோ இருக்கும். முருகனுக்கு மயில், சரஸ்வதி தேவிக்கு அன்னம், விஷ்ணுவுக்கு கருடன், சனி தேவருக்கு காகம்,  லட்சுமிக்கு ஆந்தை, இப்படியாக நான் சொல்லிக் கொண்டே போகலாம். இதன்  காரணமாக, பறவைகள் தெய்வங்களுடன் சேர்த்து வணக்கத்திற்கு உரியவைகளாக இருக்கிறது.


சிட்டுக்குருவிகள் அல்லது புறாக்கள்  வீடுகளுக்குள் கூடு கட்டுவது அனைத்து இடங்களிலும் நாம் பொதுவாக காண்கிறோம். இந்து மத நம்பிக்கைகளின்படி புறாக்கள் லட்சுமி தேவியை குறிக்கிறது. புறாக்கள் வீட்டிற்கு வருவதால், அது துரதிர்ஷ்டத்தை அதிர்ஷ்டமாக மாற்றுவதாக கூறப்படுகிறது. புறாக்கள் நிறைந்திருக்கும்  வீட்டில் எப்போதும் மகிழ்ச்சியும் நல்லிணக்கமும் நிறைந்திருக்கும். எனவே, அவற்றின் கூட்டை ஒருபோதும் அழிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.


ஒருவேளை தேவை ஏற்படும்பொது, அந்தக் கூட்டை வீட்டிற்குள்ளாகவோ அல்லது  வீட்டை ஒட்டி இருக்கும் மிக உயரமான மரத்தின் உச்சியிலோ  மாற்றி அமைக்கலாம். வாஸ்து சாஸ்திரத்தின் படி  ஒரு கூட்டை கலைப்பது என்பது  தோஷத்திற்கு உள்ளாவதாகும்.எனவே ஒருபோதும் கூட்டை கலைக்காமல்  வேறு இடங்களுக்கு மாற்றி அமைப்பது சாலச் சிறந்தது.மேலும் பறவைகளுக்கு உணவளிப்பது ஆகச்சிறந்த மன அமைதியையும் புண்ணியத்தையும் தருகிறது. ஆகவே உங்கள் வீடுகளில் புறா குருவி மற்றும் அணில் ஏதாவது கூடு கட்டி இருந்தால் அவற்றை கலைக்காமல் அவற்றுக்கு உணவளியுங்கள்.