மதுரை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
முருகனின் முதற்படை வீடு
அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் முதற்படை மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இருப்பது சிறப்பான ஒன்று.
திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழா
முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படைவீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி திருவிழா 15 நாட்கள் நடைபெறும் திருவிழாவாகும். இந்த விழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு தினமும் காலை மாலை என இருவேளையும்., தெய்வானையுடன் முருகப்பெருமான் காலையில் தங்க பல்லாக்கிலும், மாலையில் தங்க மயில், தங்க குதிரை, வெள்ளி பூத வாகனம், வெள்ளி ஆட்டுக்கிடா வாகனம், வெள்ளி யானை வாகனம், பச்சை குதிரை வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அனைத்து ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மகா திருத்தேரோட்டம்
27-ந்தேதி பட்டாபிஷேகமும், நேற்று திருக்கல்யாண வைபவமும் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்தநிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதிருத்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி கோவில் வாசல் முன்பு 5 அடுக்குகளாக வண்ணமயமான அலங்கார துணியை கொண்டு அலங்கரிக்கப்பட்ட பெரிய தேர் தயாரானது. அந்த தேரை மரத்திலான 4 குதிரைகள் இழுத்துச் செல்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. தேரோட்டத்திற்கு அதிகாலை 5.40 மணிக்கு உற்சவர் சன்னதியிலிருந்து மேளதாளங்கள் முழங்க தெய்வானையம்மனுடன் சுப்ரமணியசுவாமி புறப்பட்டு காவல் தெய்வமான கருப்பசாமி சன்னதிக்கு வந்து அங்கு சிறப்பு பூஜை நடத்தினர். அதன் பின் முருகப்பெருமான் தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் தேரின் சக்கரத்தில் தேங்காய் சூறைவிடப்பட்டு தொடங்கப்பட்டது.
அதன்பிறகு கோவில் முதல் ஸ்தானிகர் மற்றும் ரமேஷ் பட்டர் தேரில் ஏறி நின்று வெள்ளை துணியை வீசினார். காலை 6:00மணி அளவில் கோவில் வாசலிலிருந்து தேரானது புறப்பட்டது. அப்போது அங்கு திரளாக கூடியிருந்த ஏராளமான பக்தர்கள், வெற்றிவேல் முருகனுக்கு "அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா" என்று கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் தேரின் வடத்தை பிடித்து இழுத்தனர். விநாயகர் எழுந்தருளிய சிறிய சட்டத்தேரானது பெரிய தேருக்கு முன்பாக சென்றது. அதை ஏராளமான பெண் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். சிறிய சட்டத்தேரும், பெரிய தேரும் ஒன்றன்பின் ஒன்றாக கிரிவல பாதையில் ஆடி, அசைந்து பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வருகிறது. திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையானது மலையைச் சுற்றி 3 கி.மீ. சுற்றளவு கொண்டுள்ளது., 5 மணி நேரத்தில் கிகிரிவல பாதையை தேர்கள் சுற்றி வந்து 11.30 மணி அளவில் மீண்டும் கோவில் வாசல் முன்பு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுப்பிரமணியசாமிக்கு பக்தர்கள் தங்களது நேத்திக்கடன்களில் ஒன்றான வாழைப்பழங்களை சூறைவிடும் வழிபாடு நடக்க உள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - EPS: ரோட்டுல காட்டி என்ன பயன்? பார்லிமெண்ட்ல காட்ட வேண்டியதுதானே? - உதயநிதியை அட்டாக் செய்த இபிஎஸ்!