அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே,  ஒவ்வொரு தமிழ் மாதங்களில் வரும் பௌர்ணமி தினத்தை  சிறப்பாக நம் முன்னோர்கள் கொண்டாடினர்.  அந்த வகையில்  தமிழ் மாதத்தின் 12 வது மாதமான பங்குனி மாதத்தையும் நட்சத்திரத்தில் 12வது நட்சத்திரமான உத்திரத்தையும் சேர்த்து, பங்குனி மாத பௌர்ணமணி தினத்தை பங்குனி உத்திர திருவிழாவாக உலகம் முழுவதும் தமிழர்கள் கொண்டாடுகின்றனர். 


பங்குனி உத்திரத்திற்கும் முருகப்பெருமானுக்கும் என்ன தொடர்பு? முருகப்பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடைபெற்றது இதே பங்குனி உத்திரம் நாளில் ஆகும். பனிரெண்டாவது மாதமான பங்குனியில்  பனிரெண்டாவது நட்சத்திரமான உத்திரத்தில்  ஆறுமுகத்தைக் கொண்டு பன்னிரு கைகளை உடைய எம்பெருமான் முருகனின்  அருட்கடாட்சத்தை பெறுவதே பங்குனி உத்திரத்தின்  சிறப்பாகும்.  உத்திர நட்சத்திரம் சிவபெருமானுடைய நட்சத்திரம் என்பதால், அதே தினத்தில் சிவனுக்கு ஆராதனை அபிஷேகங்கள் செய்து  சிவன் கோவிலுக்கு சென்று விரதமிருந்து வழிபட்டு  வர  கஷ்டம் எல்லாம் பறந்து ஓடி  எம்பெருமான் சர்வேஸ்வரன் நன்மைகள் எல்லாம் வாரி வழங்குவார்.


2024 பங்குனி உத்திரம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது ?


 மார்ச் மாதம் 24ஆம் தேதி மதியம் 3 மணிக்கு மேல்  தொடங்கி  மார்ச் மாதம் 25ஆம் தேதி 10 மணிக்குள்ளாக  உத்திர நட்சத்திரத்தோடு சுப தினம் கூடிய பௌர்ணமி திதியில்  பங்குனி உத்திரத் திருவிழா கொண்டாடப்படுகிறது.  ஒரு சிலர் காலை 6:00 மணி முதலே விரதம் இருக்கத் தொடங்குவார்கள். ஆனால் பௌர்ணமி திதி என்பது  24 ஆம் தேதி மதியம் 3 மணிக்கு மேல் ஆரம்பிப்பதால்  எம்பெருமான் முருகனின்  அருட் கடாட்சத்தை பெறலாம்.  பங்குனி உத்திரத்தன்று முருகனுக்கு பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுக்கலாம்.


சூரிய பகவான்  மீன ராசியில் வீற்றிருக்க சந்திரன் கன்னி ராசியில் வீற்றிருக்கிறார்.  குருவினுடைய வீட்டில் சூரியனும்  புதனின் வீட்டில் சந்திரனும் வீற்றிருக்க  சூரியனின் நட்சத்திரமான உத்திரத்தில் சந்திரன் பயணிக்கும் நேரத்தில்  சிவாலயங்களுக்கு சென்று தியானத்தில் ஈடுபட்டால்  சத்ரு பயம் நீங்கும்.  செல்வம் பெருகும்.  பரம்பொருளான சிவபெருமானுடன்  பக்தர்கள்  இணைவது இந்த நாளில் மற்றொரு சிறப்பு.


பொதுவாகவே எவ்வளவு பெரிய கஷ்டங்கள் ஒருவருக்கு வாழ்வில் இருந்தாலும்  அவர் முருகனை நினைத்து விரதம் இருந்தால்  அந்த விரதத்திற்கு மிகப்பெரும் பலன் உண்டு.  பணக்கஷ்டம் இருப்பவர் நிச்சயமாக முருகனை நோக்கி தவம் இருந்தால்  அவர்களுக்கு கடன் தொல்லை நீங்கி  பணவரவு உண்டாகும்.  முருகனுக்கு மட்டுமல்ல பங்குனி உத்திரம் என்பது பொதுவாக அனைத்து  தெய்வங்களையும் வழிபடக்கூடிய ஒரு நன்னாளாக திகழ்கிறது.


கடன்களை அடைக்கும் பங்குனி  உத்திரம் !!


கால புருஷ தத்துவத்திற்கு ஆறாம் வீடான கன்னி ராசியில் உத்திர நட்சத்திரம் உள்ளதால்  இந்த நட்சத்திரம்  படங்களை அடைப்பதற்கான ஒரு நல்ல நட்சத்திரமாக பார்க்கப்படுகிறது.  ஆறாம் பாவம் கடனைக் குறிக்கும்  கால புருஷ தத்துவத்திற்கு ஆறாம் பாவமான கடன்களை குறிக்கக்கூடிய கன்னி ராசியில் உத்திர நட்சத்திரத்தில் பங்குனி மாதத்தில் இந்த சிறப்பு நன்னாள் அமைந்திருப்பதால் பங்குனி உத்தர நட்சத்திரம்  நிச்சயமாக கடன்களை அடைக்க கூடிய ஒரு சிறப்பான நட்சத்திரமாக தான் இருக்கும். 


இந்த நாளில் நீங்கள் முருகப்பெருமானுடைய பெயருக்கு சிறப்பு அர்ச்சனைகளை கோயில்களில் செய்து வந்தாலும் வீட்டில் பூஜை அறையில் முருகப்பெருமானின் படத்திற்கு விளக்கேற்றி  பக்தியுடன் வணங்கி வந்தாலோ  உங்களுடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.  குறிப்பாக  ஆயிரங்களைப் பார்த்தவர்கள் எல்லாம் கோடிகளைப் பார்க்கும் அளவிற்கு  இந்த நன்னாள் நம்மை உயர்த்தும்.