புத்தர் மற்றும் அவரது சீடர்களின் புனித எச்சங்கள் நேற்று சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டது. நூற்றுக்கணக்கான சீடர்கள் மற்றும் பக்தர்கள் புத்தரின் புனித எச்சங்களை நேரில் வழிபட்டு மகிழ்ந்தனர்.
புத்தர் மற்றும் அவரது சீடர்களின் புனித நினைவுச்சின்னங்கள் நேற்று டெல்லியின் பாலம் விமான தளத்திற்கு விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.
விமானப்படை விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ள ஜம்போ மஜூம்தார் மையத்தின் ஜக்மோகன் மண்டபத்தில் புத்த பகவான் மற்றும் அவரது சீடர் சாரிபுத்ரா மற்றும் அர்ஹத் மௌத்கலயன் ஆகியோரின் புனித எச்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
பிப்ரவரி 23 அன்று பாங்காக்கில் உள்ள பிரமாண்டமான சனம் லுவாங் பெவிலியனில் பிரத்யேகமாக கட்டப்பட்ட பந்தலில் புத்த பகவான் மற்றும் அவரது சீடர்களின் எச்சங்கள் முதன்முறையாக ஒன்றாக வைக்கப்பட்டன.
தாய்லாந்தின் நான்கு நகரங்களில் 25 நாட்கள் கண்காட்சிக்கு பிறகு, தலைநகர் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. தாய்லாந்து மற்றும் பாங்காக் உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் (பக்தர்கள்) இந்த புனித நினைவுச்சின்னத்திற்கு பூஜை செய்து வழிபட்டனர்
இதைத்தொடர்ந்து தற்போது விமானப்படை விமான நிலைய வளாகத்தில் உள்ள ஜம்போ மஜூம்தார் மையத்தின் ஜக்மோகன் மண்டபத்தில் நிறுவப்பட்ட புத்தர் மற்றும் அவரது சீடரின் புனித நினைவுச்சின்னங்கள் வழிபாடு செய்யப்பட்டன.
வெளியுறவு மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் மீனாட்சி லேகி, ஐபிசி இயக்குநர் ஜெனரல் அபிஜித் ஹல்டர், புத்த மத குருக்களுடன் நூற்றுக்கணக்கான சீடர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று நடைபெற்ற விழாவின் போது, புத்த குருக்களுடன் மீனாட்சி லேகி உட்பட அனைத்து மக்களும் ஜக்மோகன் மண்டபத்தில் நிறுவப்பட்ட புத்தர் மற்றும் அவரது சீடர்களின் சிறப்பு நினைவுச்சின்னங்களை வணங்கினர்.
மேலும் நேற்றைய நிகழ்ச்சியில், புத்த மத குருக்களுடன் நூற்றுக்கணக்கான சீடர்கள் மந்திரங்களை உச்சரித்து புத்தரை வழிபட்டனர், அதன் பிறகு அனைவரும் பாரம்பரிய இசையின் தாளங்களில் மெய்மறந்து புத்தபிரானை பிரார்த்தனை செய்தனர்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும், புத்தரின் புனித எச்சம் வெளியுறவு மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் மீனாட்சி லேகியால் தேசிய அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.