Panguni Uthiram 2024: தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது பங்குனி மாதம். பங்குனி மாதத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் பங்குனி உத்திரம். தமிழ்நாடு முழுவதும் பல ஊர்களில் பங்குனி உத்திரம் கோலாகலமாக கொண்டாடப்படும். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அம்மன் ஆலயம், சிவாலயம், முருகப்பெருமான் ஆலயம், பெருமாள் ஆலயம் என அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறும்.


மிகவும் சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர நாளில் தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றுள்ளது.


சிவன் – பார்வதி திருமணம்:


அனைத்திற்கும் ஆதியான சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடந்த நன்னாள் பங்குனி உத்திரம் ஆகும். சிவபெருமானை நோக்கி கடுமையாக தவம் புரிந்த பார்வதி தேவியை, பல இன்னல்களுக்கு பிறகு சிவபெருமான் திருமணம் செய்து கொண்ட நாள் பங்குனி உத்திரம் ஆகும்.


முருகன் – தெய்வானை திருமணம்:


தமிழ்க்கடவுளாக போற்றப்படும் முருகப் பெருமானுக்கும் – தெய்வானைக்கும் இடையே திருமணம் நடைபெற்ற நாளும் இதே பங்குனி உத்திரம் ஆகும். இதனால், தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அறுபடை வீடுகளிலும் கோலாகலமாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படும். பங்குனி உத்திர நாளில் விரதம் இருந்து வள்ளி தெய்வானையுடன் காட்சி தரும் முருகனை வணங்கினால் திருமணத் தடை நீங்கி திருமணம் நடைபெறும்.


ராமன் – சீதை திருமணம்:


மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒன்று ராமர் அவதாரம். ராமருக்கும் – சீதைக்கும் திருமணம் நடந்த நாள் பங்குனி உத்திரம் என்று புராணங்கள் கூறுகிறது.


ஆண்டாள் – பெருமாள் திருமணம்:


சூடிக் கொடுத்த சுடர்கொடி என்று போற்றப்படும் ஆண்டாள் தான் மனதார உருகி வேண்டிய பெருமாளை திருமணம் செய்து கொண்டதும் இதே பங்குனி உத்திர நாள் ஆகும்.


இந்த திருமணங்கள் மட்டுமின்றி ராமபிரானின் சகோதரர்களான லட்சுமணன் – ஊர்மிளை, சத்ருகன் – ஸ்ருத கீர்த்தி ஆகியோருக்கும் இதே பங்குனி உத்திர நாளில்தான் திருமணம் நடைபெற்றது.


பரதன் – மாண்டவிக்கும் இதே பங்குனி உத்திர நன்னாளில்தான் திருமணம் நடைபெற்றது. தேவர்களின் தலைவன் என்று புராணங்களில் கூறப்படும் இந்திரன் – இந்திராணியைத் திருமணம் செய்ததும் இதே நன்னாளில் ஆகும். சந்திர பகவான் 27 நட்சத்திர கன்னியர்களையும் திருமணம் செய்து கொண்டதும் இதே பங்குனி உத்திரம் ஆகும்.


மகாலட்சுமி, சரஸ்வதி தேவி:


மகாவிஷ்ணுவை நோக்கி கடும் தவம் புரிந்து வந்த மகாலட்சுமிக்கு தனது மார்பில் அமர திருமால் இடம் தந்ததும் இதே பங்குனி உத்திர நன்னாள் என்று விஷ்ணுபுராணம் கூறுகிறது. படைக்கும் தெய்வம் என்று கருதப்படும் பிரம்மா தன் மனைவியான சரஸ்வதி தேவியை நாவில் வைத்துக் கொண்டதும் இதே பங்குனி உத்திர நன்னாளில் ஆகும்.


சிவபெருமானை கோபத்திற்கு ஆளாக்கி அவரது நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதனுக்கு, சிவபெருமான் மீண்டும் உயிர் தந்ததும் இதே பங்குனி உத்திரம் ஆகும். பங்குனி உத்திரம் நன்னாளில் ஐயப்ப அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகிறது.


அனைத்து தெய்வங்களுக்கும் மிகவும் உகந்த நளாக இருக்கும் பங்குனி உத்திர நன்னாளில் கோயில்களுக்கு சென்று வணங்கினால் பணக்கஷ்டமும், மனக்கஷ்டமும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.