அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாட கூடிய திருவிழாக்களில் ஒன்றான தைப்பூச திருவிழா, கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் நடைபெற்று வந்தது. இதன் முக்கிய திருவிழாவான முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்வும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தைப்பூசத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏழாம்நாள் திருவிழா அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். இந்நிலையில் தைப்பூசத் திருவிழாவின் நிறைவு நாளான தெப்பதேர் நிகழ்ச்சி நடைபெற்றது.



பழனி பெரியநாயகி அம்மன் கோவில் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் அருள்மிகு முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானை சமேதராக தெப்பத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து இன்று குறவர் இனத்தை சேர்ந்த வள்ளிக்கும்- முருகனுக்கும் திருமணம் நடைபெற்றதால் வள்ளியின் பிறந்தவீடான குறவர் இனமக்களின் சார்பில் தாய் வீட்டு சீதனம் வழங்கப்பட்டது. 




இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள குறவர் இனமக்கள் அனைவரும் இணைந்து பழனிமுருகனுக்கு தாய் வீட்டு சீதனம் கொண்டு பழனி பேருந்து நிலையம் முதல் தேவர் சிலை, சன்னதி வீதி ,அடிவாரம் வழியான மலைக்கோவலுக்கு சென்றனர். இதில் இளம் பெண்களுக்கு வள்ளி வேடம் இட்டும் ,சிறுவர்களுக்கு வேடம் இட்டும் பெண்கள் தேன், திணைமாவு,மா,பலா, வாழை உள்ளிட்ட பழங்கள், கிழங்குகள், வில்-அம்பு, ஆகியவை சீர்வரிசையில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ,




அலகு குத்தியும் நேர்த்திகடனை செலுத்தியும் ,முருகனுக்கும் வள்ளிக்கும் சீதனமாக வழங்கப்பட்டது. சீர்வரிசை பொருட்களை பழனி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து முருகனை வழிபாடு செய்தனர். இந்நிகழ்ச்சியில் குறவர் இனத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்