Palani Murugan temple: தொடர் விடுமுறையையொட்டி பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

நவராத்திரி விழாவையொட்டி நிறுத்தப்பட்ட தங்கரத புறப்பாடு நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது.

Continues below advertisement

உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோயில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகும். இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட பல்வேறு திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். மேலும் விசேஷ நாட்கள், வாரவிடுமுறை, தொடர்விடுமுறை நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.  அந்தவகையில் ஆயுதபூஜை, விஜயதசமி என தற்போது தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. தொடர் விடுமுறை எதிரொலியாக, பழனி முருகன் கோவிலில் நேற்று இன்றும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

Continues below advertisement

குறிப்பாக வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன்களில் பழனிக்கு படையெடுத்தனர். ஐப்பசி மாத பிறப்பையொட்டி சபரிமலையில் நடை திறந்து உள்ளதால், அங்கு சாமி தரிசனம் செய்ய வரும் அய்யப்ப பக்தர்களும் பழனிக்கு வருகை தந்தனர். இதனால் அதிகாலை முதலே அடிவாரம், மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பொது, கட்டணம் மற்றும் கட்டளை தரிசன வழிகளில் நீண்ட வரிசையில் பக்தர்கள் 1 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் அடிவாரத்தில் இருந்து பழனி மலைக்கோவிலுக்கு செல்லும் ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம் ஆகிய இடங்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்றனர்.

மேலும் பழனி முருகன் கோவில் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 15-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை, பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மேலும் மாலையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. நவராத்திரி விழாவின் சிகர நிகழ்ச்சியாக வில் அம்பு போடுதல், மகிஷாசூர வதம் நிகழ்ச்சி இன்று (திங்கட்கிழமை) பழனி கோதைமங்கலத்தில் நடைபெற்றது. இதையொட்டி பழனி முருகன் கோவிலில் இன்று பூஜை முறைகள் மாற்றப்பட்டு  12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடந்தது. அதையடுத்து 5.30 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜை மதியம் 1.30 மணிக்கே நடந்தது. பின்னர் மாலை 3 மணிக்கு மலைக்கோவிலில் இருந்து பராசக்திவேல் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு புறப்பாடாகி செல்கிறது. அதையடுத்து கோவில் நடை அடைக்கப்படுகிறது. எனவே பகல் 11 மணிக்கு பிறகு பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை.



பின்னர் பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோதைமங்கலம் செல்கிறார். மாலை 6 மணிக்கு மேல் வில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது முத்துக்குமார சுவாமி வில் அம்பை எய்து மகிஷாசூரனை வதம் செய்கிறார். பின்னர் மீண்டும் முத்துக்குமாரசுவாமி பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு திரும்ப வருகிறார். அதையடுத்து அங்கு அர்த்தசாம பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து பராசக்திவேல் மீண்டும் பழனி முருகன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இதையடுத்து நாளை வழக்கம்போல் முருகன் கோவில் நடை திறக்கப்பட்டு 6 கால பூஜைகள் நடைபெறுகிறது. மேலும் நவராத்திரி விழாவையொட்டி நிறுத்தப்பட்ட தங்கரத புறப்பாடு நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola