விஜயதசமியை முன்னிட்டு மதுரையில் உள்ள இம்மையிலும் நன்மைதருவார் திருக்கோவிலில் வித்யாரம்பம் நிகழ்வு - ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து அச்சரம் எழுதி கல்வியை தொடங்கி வழிபாடு.

 

வித்யாரம்பம் நிகழ்வு

 

வித்யாரம்பம் பாரம்பரியமாக விஜயதசமி நாளில் கேரளம், தமிழ்நாடு, கடலோர கர்நாடகம் போன்ற பகுதிகளில் கொண்டாடப்படும் ஒரு சடங்கு. கல்வியை குழந்தைகள் முறையாக கற்க வேண்டும் என்று இந்த நாளில் இந்ந நிகழ்ச்சி நடப்பது வழக்கம். குழந்தைகளுக்கு முறையாக இசை, நடனம், மொழிகள், நாட்டுப்புற கலை போன்றவை கற்பிப்பது இந்த நாளில் துவங்கப்படுகிறது. இது குழந்தைகளுக்கு எழுத்துக்களை கற்பிக்கும் முக்கியமான விழாவை உள்ளடக்கியது.

 



 

 

“அ” என்ற எழுத்தை எழுத செய்வது


தமிழ்நாட்டில் இதை முதல் எழுத்து என்றும் அழைக்கின்றனர். அதாவது குழந்தைகளுக்கு நெல்லில், அரிசியில், தானியத்தில் “அ” என்ற எழுத்தை எழுத செய்வது. ஒடிசாவில் இது காதி சுவான் என்று அழைக்கப்படுகிறது. அங்கு குறிப்பாக விநாயக சதுர்த்தி மற்றும் வசந்த பஞ்சமி ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. வித்யாரம்பம் விழாவில் குழந்தைகள் அறிவு உலகிற்கு அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் என்பது நம்பிக்கை. அடிப்படையில் குழந்தைகளுக்கான சடங்கு என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கல்விச்சடங்கு குழந்தைகளை பாடத்திட்டத்தின் எழுத்துக்களில் முறையாக அறிமுகப்படுத்துகிறது. வித்யாரம்பம் விழா 2-5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக நடத்தப்படுகிறது.






இம்மையிலும் நன்மை தருவர் திருக்கோவிலில் வித்யாரம்பம்

 




இந்நிலையில் விஜயதசமியை முன்னிட்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கற்றலில் ஈடுபடுத்துவது தொடங்கும் வித்யாரம்பம் நிகழ்வானது மதுரையிலுள்ள பிரசித்தபெற்ற இம்மையிலும் நன்மை தருவர் திருக்கோவிலில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் மதுரை மாநகரில் உள்ள அண்ணாநகர், கே.கே.நகர், தெற்குவாசல், டி.வி.எஸ்.,நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் கோவிலுக்கு வருகை தந்து அங்கு நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்வில் கலந்துகொண்டனர். ஞானத்தின் தெய்வமான சரஸ்வதி தேவியை வணங்கி மரியாதை செய்யும் வகையில் வழிபாடு நடத்தினர். தொடர்ச்சியாக ஓம் என்ற பக்தி முழக்கத்தோடு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பச்சரிசியைக் கொண்டு அச்சரம் எழுதி தங்களின் கல்வியை தொடங்கிவைத்தனர். பின்னர் குழந்தைகளின் கையை பிடித்துஞ பரப்பி வைத்திருக்கும் பச்சரிசியில் குழந்தைகள் தமிழெழுத்தை ஆரம்பிக்கும்போது '' என்று எழுதினா். இதேபோன்று பல்வேறு தாய்மொழிகளை கொண்டவர்களும் அவர்களது தாய் மொழிகளில் அ எழுதி தொடங்கினர்.



 

அரிச்சுவடி ஆரம்பம்

 

தொடர்ந்து தங்களது குழந்தைகளின் கல்வி சிறந்து விளங்கவும், வாழ்க்கை மேம்படவும் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்ட ஏராளமான குழந்தைகள் உற்சாகமுடன் தங்களது கல்வியை தொடங்குவதை புன்னகையுடன் தொடங்கினர். இதனை தொடர்ந்து குழந்தைகள் தங்களுக்கு தெரிந்த பாடல்கள், பாடங்களை தங்களது பெற்றோர்களிடம் எடுத்து கூறினர். வித்யாரம்பம் முடித்த பின்னர் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் கோவிலில் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து வருகை தந்த பக்தர்களுக்கு எழுதுபொருட்கள் மற்றும் பிரசாதமும் வழங்கப்பட்டது. இதுபோன்று மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்வில் ஏராளமான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு அரிச்சுவடி ஆரம்பம் என்ற கல்வியை தொடங்கிவைத்து வழிபட்டனர்.