கேரள மாநிலம் பத்தினம் திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கார்த்திகை மாதத்தில் மட்டும முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும்.
மார்கழி மாதத்திலும் தை மாதத்திலும் மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். பங்குனி மாத ஆராட்டு விழாவும், சித்திரை மாத விஷூகனி காணும் விழாவும் கோயிலில் சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் கடந்த மாதம் 16 ஆம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. 17 ஆம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். சபரிமலை சீசன் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலையில் உஷ பூஜை, உச்சபூஜை, நித்ய பூஜை, சகஸ்ரகலச பூஜை, படி பூஜை, உதயாஸ்தமன பூஜை உள்பட பூஜைகளும், புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், கலசாபிஷேகம் என பல விதமான அபிஷேக ஆராதணைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த பூஜைகளில் படிப்பூஜைக்கு அதிகபட்சமாக ரூ. 1,37,900 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக உதயாஸ்தமன பூஜைக்கு ரூ. 61,800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. படிப்பூஜைக்கான முன்பதிவு வரும் 2038 ஆம் ஆண்டு வரை நிறைவடைந்துள்ளது. அதேபோல் உதயாஸ்தமன பூஜைக்கு வரும் 29 ஆம் ஆண்டு வரை முன்பதிவு முடிவடைந்துள்ளது. இந்த இரண்டு பூஜைகளும் நீண்ட நேரம் நடத்தப்படும் என்பதால் சீசன் நேரத்தில் பக்தர்கள் காதிருக்கும் நிலை ஏற்படும். இதனை தவிர்க்க இந்த இரண்டு பூஜைகளும் சீசன் சமையத்தில் நடத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்படுவது வழக்கம். அந்த சமையங்களில் மட்டும் இந்த பூஜை நடத்த தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது.
படி பூஜை என்பது சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருக்கும் 18 படிகளையும் நன்கு கழுவி, பட்டாடை விரித்து, பூக்களால் அலங்கரிக்கப்படும். மேலும் 18 படிகளிலும் விளக்கு ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதே சமயம் உதயாஸ்தமன பூஜை என்பது காலை நடை திறப்பு முதல் இரவு நடை அடைப்பு வரை 18 வகையான சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பக்தர்களில் வசதிக்காக இந்த இரண்டு பூஜைகளும் மாத பூஜை நாட்களில் நடத்தப்படும் என திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது.
பக்தர்களின் வசதிக்காக திருவாங்கூர் தேவஸ்தானம் தரிசன நேரம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐயப்பனை தரிசனம் செய்ய 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, சுப்ரபாத சேவை மற்றும் நெய் அபிஷேகத்திற்குப் பிறகு தரிசனங்கள் தொடங்கப்படும். பின்னர் மதியம் 1 மணிக்கு தரிசனம் நிறுத்தப்படும். அதன்பிறகு மாலை 4 மணிக்கு மீண்டும் தரிசனம் தொடங்கப்பட்டு இரவு 11 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதனை தொடர்ந்து ஹரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு பின்னர் நடை அடைக்கப்படும்.
இந்த பூஜைகளை நேரில் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம். இதனை தொடர்ந்து, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.