216 ஆண்டுகளில் 16வது முறையாக தூயபனிமயமாதா அன்னையின் தங்கத்தேர் பவனி நடைபெற உள்ளது. அடுத்தாண்டு தங்கத்தேர். ஆயத்தப்பணிகள் தொடங்கியது.
வரலாற்று சிறப்புமிக்க தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் சிறப்புகளுக்கெல்லாம் மணி மகுடம் சேர்ப்பது 1806ம் ஆண்டு இப்பேராலயத்தின் பரதகுல மக்களால் வடிவமைக்கப்பட்ட தங்கத்தேர்.தேவமாதாவின் சிறிய பக்தி முயற்சியான ஜெப மாலை பக்தியை குறிக்கும் வகையில் 53 அடி உயரத்தில் பல்வேறு வேதசத்தியங்களின் வெளிப்பாடாக தங்கத்தேரானது பரதகுலத் தலைவர் சிஞ்ஞோர்டோம் கபிரியேல் தெக்குருஸ்வாஸ் கோமஸ் தலைமையில் வடிவமைக்கப்பட்டது. மிகுந்த கலை நுட்பத்துடனும், வேதசாஸ்திர வெளிப்பாடாகவும் பரதகுல சிற்பி நேவிஸ் பொன்சேகர் தங்கத்தேரை செய்து முடித்தார்.
தேவமாதாவின் சுத்திகரிப்பு திருவிழாவான பிப்ரவரி 2ம் தேதி 1806ம் ஆண்டு பனிமயமாதாவின் அற்புத சுரூபம் திருமந்திர நகர வீதிகளில் முதன் முதலாக தங்கத்தேரில் பவனி வந்தது. மீனவர்களின் பாதுகாவலராகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கும் பனிமய மாதாவின் தேர்ச் சிறப்புகள் நிறைந்தது. சிலுவைக்குப் பதிலாக நட்சத்திரத்தைக் கொண்டிருக்கும் இத்தேரிலுள்ள தங்கக் கிரீடம், கடவுளின் தந்தை சிலை, புறா வடிவில் தூய ஆத்மா, குழந்தை வடிவில் இயேசுநாதர், தூய அன்னை, மீனவ சமுதாயத்தினரின் கதை சொல்லும் அடித்தள வடிவமைப்பு என்று ஒவ்வொரு அம்சமும் அர்த்தமுள்ளதாக உருவாக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி நகரில் 02-02-1806 அன்று முதலாவதாக தங்கத் தேர்பவனி நடைபெற்றது. தொடர்ந்து 2வது முறையாக 1872 ஆம் ஆண்டிலும், 3வது முறையாக 1879,4 வது முறையாக 1895 , 5 வது முறையாக 1905,6 வது முறையாக 1908, 7 வது முறையாக 1926, 8 வது முறையாக 1947, 9 வது முறையாக 1955, 10 வது முறையாக 1964, 11 வது முறையாக 1977 ஆண்டிலும், 12 வது முறையாக 1982, 13 வது முறையாக 2000 ஆண்டில் நடைபெற்றது. தொடர்ந்து 14 வது முறையாக 2007ம் ஆண்டிலும் அதனை தொடர்ந்து 15 வது முறையாக 05-08-2013 அன்று என இதுவரை 15 முறைகள் தூய பனிமய அன்னையின் தங்கத்தேர் பவனிகள் நடந்துள்ளது.
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் முக்கிய நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில், அந்த ஆண்டுகளில் தங்கத்தேர் பவனி நடைபெறுவது வழக்கம். அதன்படி இதுவரை 15 முறை தங்கத்தேர் பவனி நடந்துள்ளது. முதல் முறையாக 02.02.1806-ல் தூய பனிமய மாதா சொரூபம் தூத்துக்குடிக்கு வந்ததன் 250-வது ஆண்டை முன்னிட்டு தங்கத்தேர் பவனி நடந்தது. கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு பனிமய மாதா பெயரில் புதிய ஆலயம் கட்டப்பட்டதன் 300-வது ஆண்டை முன்னிட்டு தங்கத்தேர் பவனி நடந்தது. இந்நிலையில், தூத்துக்குடி மறைமாவட்டத்தின் நூற்றாண்டை முன்னிட்டு அடுத்த ஆண்டு(2023) தங்கத்தேர் பவனி நடைபெறும் என்று பிஷப் ஸ்டீபன் அந்தோணி அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து தங்கத்தேர் வடிவமைப்புககான ஆயத்த பணிகள் தொடங்கி உள்ளன. தங்கத்தேர் வடிவமைக்கும் பணிக்காக பேராலய வளாகத்தில் பிரமாண்டாக 6 பனை மரங்களை கொண்டு ஷெட் அமைத்து இதற்காக பனைமரங்கள் முழுமையாக கொண்டுவரப்பட்டு ராட்சத கிரேன்கள் மூலம் நடப்பட்டன. பின்னர் பக்தர்கள் படை சூழ தேர் கூடத்தில் இருந்து தேர் வெளியே எடுத்துவரப்பட்டு ஆண்களும் பெண்களும் வடம் பிடித்து இழுத்து கொண்டு வந்து இந்த ஷெட்டில் நிறுத்தி தேர் வடிவமைக்கும் பணிகள் நடைபெற்றன.
இந்த பணிகள் முடிக்கப்பட்டு, 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி பொன்மகுடம் சூட்டிய தூயபனிமயமாதா அன்னையின் தங்கத்தேர் பவனி தூத்துக்குடியில் நடைபெற உள்ளது. இதுகுறித்து பிஷப் குமார ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், அடுத்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் நாள் 16வது முறையாக தூத்துக்குடி மறைமாவட்டம் தோன்றி நூற்றாண்டு விழா கொண்டாடுகிறது. அந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் நாள் பனிமயத் தாயின் தங்க தேர் தூத்துக்குடி மாநகரில் பவனி வர இருக்கிறது.
அதற்கு ஆயத்தமாக தங்கத்தேர் இழுத்து பேராலய வளாகத்தில் உள்ள புதிய தேர்கூடத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும் பணி நேற்று நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். தொடர்ந்து அடுத்த 10 மாதங்களில் ஆயத்த பணி நடைபெறுகிறது. 53 அடி உயரம் கொண்ட இந்த தேரானது 53 ஜெபமாலை வைத்து ஜெபிக்கிறதை குறிக்கிறது என்றார்.
மேலும் படிக்க: Crackers Bursting Time: வெடிய வெடி.. இந்த நேரப்படி..வெடி வெடிக்க நேரம் அறிவித்த மாசுக்கட்டுப்பாடு வாரியம்