அனைத்திற்கும் ஆதியாக கருதப்படுபவர் சிவபெருமான். லிங்க வடிவிலே சிவபெருமான் பல ஆலயங்களில் காட்சி தருகிறார். சில கோயில்களில் நடராஜ ரூபத்தில் காட்சி தருகிறார். ஆனால், சயன கோலத்தில் அதாவது படுத்த நிலையில் சிவ பெருமான் காட்சி தரும் அரிதான கோயில் ஆந்திராவில் உள்ளது.


சயன கோலத்தில் காட்சி தரும் சிவபெருமான்:


ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது சித்தூர். சித்தூர் மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ள கிராமம் சுருட்டப்பள்ளி. இந்த கிராமத்தில்தான் சிவபெருமான் சயன கோலத்தில் காட்சி தருகிறார். அதுவும் பார்வதி தேவியின் மடியில் தலை வைத்திருப்பது போல காட்சி தருகிறார். எங்குமே இல்லாத வகையில் இங்கு மட்டும் சிவ பெருமான் சயன கோலத்தில் காட்சி தருவது ஏன்? என்று கோயில் புராணம் சொல்கிறது.


 புராணத்தின்படி, வாசுகி பாம்பை கயிறாக திரித்து, மந்திர மலையை மத்தாக மாற்றி பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்தனர். அப்போது, வலி தாங்காத வாசுகி பாம்பு மிகக்கொடிய ஆலகால விஷத்தை கக்கியது. இதனால், ஆலகால விஷத்தில் இருந்து தங்களை காக்க வேண்டி தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம் தஞ்சம் அடைந்தனர்.


தல வரலாறு:


மற்ற உயிர்களை காப்பதற்காக அந்த ஆலகால விஷத்தை சிவ பெருமானே விழுங்கினார். மிகக்கொடிய அந்த விஷம் சிவபெருமானின் உடலுக்குள் இறங்காமல் இருப்பதற்காக பார்வதி தேவி சிவபெருமானின் கழுத்தை (கழுத்தை புராணங்களில் கண்டம் என்றும் குறிப்பிடுவார்கள்) பிடிப்பார். இதனால், விஷம் உடலுக்குள் செல்லாமல் கழுத்திலே நின்றுவிடும். இதன் காரணமாகவே ஈசனுக்கு நீலகண்டன் என்ற பெயரும் உண்டானது.


இந்த நிகழ்வுக்கு பிறகு, சிவபெருமானும், பார்வதி தேவியும் கயிலாயத்திற்கு சென்றனர். அப்போது, சிவ பெருமானுக்கு களைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஈசனும், பார்வதி தேவியும் ஓரிடத்தில் ஓய்வு எடுத்தனர். அப்போது, சிவபெருமான் பார்வதி தேவி மடியில் தலை வைத்து படுத்து ( சயன கோலத்தில்) ஓய்வு எடுத்தார். அவர்கள் ஓய்வு எடுத்த இடமே சுருட்டப்பள்ளியான இந்த கிராமம் என்று ஆலய வரலாறு சொல்கிறது. அதன் காரணமாகவே, சிவ பெருமான் இந்த கோயிலில் சயன கோலத்தில் காட்சி தருகிறார்.


பிரதோஷ வழிபாடு:


இந்த கோயிலில் பார்வதி தேவியை சர்வமங்களா என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். சயன கோலத்தில் காட்சி தரும் பள்ளிகொண்டீஸ்வரராக தனி சன்னதியில் காட்சி தருகிறார். இந்த கோயிலின் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த கோயிலில் பெரும்பாலான தெய்வங்கள் தம்பதிகளாக  காட்சி தருகின்றனர். இங்கு வழிபட்டால் தீராத குறைகள் நீங்கி நன்மைகள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.


இந்த கோயிலின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், சிவபெருமான் ஜூரஹரமூர்த்தி அவதாரம் ஆகும். இந்த அவதாரத்தை ஒரே கல்லில் செதுக்கியிருப்பார்கள். இந்த கோயிலில் பிரதோஷ வழிலாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் இங்கு நடை திறந்திருக்கும். சென்னையில் இருந்து சித்தூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் சுருட்டப்பள்ளியில் நின்று செல்லும். கோயிலின் வாசல்தான் பேருந்து நிறுத்தமாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.