‘விண்ணை முட்டும் அரகர மகாதேவா கோஷம்’ தந்தை நெல்லையப்பருக்கு உதவிய திருச்செந்தூர் முருகன்...! பூரிப்பில் பக்தர்கள்..!

”அரகரமகாதேவா” ”ஓம் நமச்சிவாய” என விண்ணை முட்டும் முழக்கங்களுடன் ஆடி அசைந்து செல்லும் ”நெல்லையப்பர் தேர் பவனி”

Continues below advertisement

 நெல்லை ஆனித்தேர் திருவிழா:

நெல்லையில் மிகவும் புகழ்பெற்ற 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த நெல்லையப்பர் - காந்திமதியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆனிப் பெருந்திருவிழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் இன்று ஆனித் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இன்று காலை 6:30 மணி முதல் 7.30 மணிக்குள் தேர் திருவிழா தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. திட்டமிட்டபடி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், நெல்லை எம்பி ராபர்ட் ப்ரூஸ் உள்பட சிறப்பு விருந்தினர்கள் 7.18 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து தேர்த் திருவிழாவை தொடங்கி வைத்த நிலையில் தேரில் கட்டப்பட்டிருந்த மூன்று ராட்சத வடம் அறுந்தது. இதனால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் தேர் இழுப்பதில் தாமதம் ஏற்பட்டது. உடனடியாக மாற்று வடம் கொண்டுவரப்பட்டு தேரில் கட்டப்பட்டது. அதை தொடர்ந்து சுமார் 40 நிமிடம் தாமதமாக தேர் திருவிழா தொடங்கிய நிலையில் மீண்டும் ஒரு சில வினாடிகளில் வடம் அறுந்தது. பின்னர் மீண்டும் மாற்று வடம் கட்டப்பட்டு தேர் இழுக்கப்பட்ட நிலையில் சுமார் 500 மீட்டர் தொலைவில் வரும் போது மூன்றாவது முறையாக தேரின் வடம் அறுந்தது.

Continues below advertisement

 


அபசகுணமாக எண்ணி அதிருப்தியடைந்த பக்தர்கள்:

இதையடுத்து இரும்பு சங்கிலி கொண்டு தேரை இழுக்கும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். அதன்படி இரும்பு சங்கிலி கொண்டுவரப்பட்டு இரண்டு வடத்துக்கு நடுவில் கட்டப்பட்டது. தொடர்ந்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி தேரை இழுக்க தொடங்கினர். அதே சமயம் சிறிது தூரம் போன நிலையில் நான்காவது முறையாக வடம் அறுந்தது. பின்னர் சுமார் அரை மணி நேரம் தாமதத்திற்கு பிறகு தேர் இழுக்கப்பட்டு டவுண் வாகையடி மூக்கில் செல்லும் போது மீண்டும் ஐந்தாவது முறையாக வடம் அறுந்தது.  ஐந்து முறை திருத்தேர் வடம் அறுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ஏற்கனவே தேர் இழுக்க தொடங்கிய சில வினாடிகளிலையே வடம் அறுந்ததால் பக்தர்கள் அதனை அபசகுணமாக கருதினர். குறிப்பாக 517 ஆண்டுகளில் இல்லாத வகையில் இதுபோன்ற வடம் அறுந்ததால் இந்து அறநிலைத்துறையின் அலட்சியமே இதற்கு காரணம் எனக்கூறி இந்து முன்னணி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பக்தர்கள் மத்தியிலும் கோவில் நிர்வாகம் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டது.

இதற்கிடையில் விநாயகர் தேரின் சக்கரத்தில் அடிக்கப்பட்டிருந்த இரும்பு தகடு பெயர்ந்து சக்கரம் உருக்குலைந்து காணப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் தேர் திருவிழாவை அதிகாரிகள் முன்னெச்செரிக்கையுடன் கையாளவில்லை என்பது பக்தர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. தேருக்கு பின்னால் தடி வைப்பதிலும் கடும் சிரமங்கள் ஏற்பட்டது. இருப்பினும் இளைஞர்கள்  உற்சாகத்தோடு தொடர்ந்து தேரை நகர்த்தினர். வடம் அறுந்து விழுந்த காரணத்தால் இம்முறை நெல்லைத்தேர் திருவிழாவில் மிகவும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் நெல்லையப்பா என்ன இது சோதனை என புலம்பிய படி பதறினர். 


தந்தைக்கு உதவிய மகன்:

இந்நிலையில் மாற்று ஏற்பாடாக முதலில் ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து வடம் கொண்டு வர முயற்சி மேற்கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் அருகே உள்ள தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் தேரின் வடம் அங்கிருந்து நெல்லைக்கு கொண்டு வரப்பட்டது.   தொடர்ந்து அந்த வடத்தை பயன்படுத்தி தேரானது இழுக்கப்பட்டு வருகிறது.. தந்தை நெல்லையப்பருக்கு மகன் சுப்பிரமணியன் உதவியதாக அனைவரும் பூரித்தனர்... இதனைத் தொடர்ந்து  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ”அரகரமகாதேவா” ”ஓம் நமச்சிவாய” என விண்ணை முட்டும் அளவில் முழக்கங்கள் எழுப்பி தேரை இழுத்தனர். இந்த ஆண்டு தேர் நிலைக்கு நிற்பதற்கு இரவு 7 மணி வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது. 

Continues below advertisement