திருப்பரங்குன்றம் வட்டத்திற்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் விடுமுறை அளித்துள்ளனர். எனவே மதுரை மாவட்டம் முழுவதும் விடுமுறை அளிக்க வேண்டும். - எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா.

 

திருப்பரங்குன்றம் முதல்படை வீடு

 

தமிழ்கடவுள் முருகனின் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருகின்ற 14-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் கடந்த வியாழக்கிழமை தொடங்கிவிட்டது. இந்நிலையில் இது தொடர்பாக திருப்பரங்குன்றம் வட்டத்திற்குட்பட்ட பள்ளி கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் 14.07.2025 அன்று பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கும் இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறைக்குப் பதிலாக 19.07.2025 சனிக்கிழமை மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் வேலை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் திருப்பரங்குன்றம் மட்டுமல்ல, மதுரை மாவட்டம் முழுவதும் விடுமுறை அளிக்க வேண்டும் என திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ., கோரிக்கை வைத்துள்ளார்.

 

மதுரை மாவட்டம் முழுவதும் விடுமுறை அளிக்க வேண்டும்

 

இது குறித்து எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில்..,”திருப்பரங்குன்றம் பகுதியில் பாதுகாப்புகள் அதிகப்படுத்த வேண்டும். அடிப்படை தேவைகள் செய்து முடிக்க வேண்டும். திருப்பரங்குன்றம் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தென் மாவட்ட மக்களே வருவார்கள். குறிப்பாக மதுரையில் பலரும் கலந்துகொள்வார். ஆனால் திருப்பரங்குன்றம் வட்டத்திற்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் விடுமுறை அளித்துள்ளனர். மதுரை மாவட்டத்திற்கே விடுமுறை அளிக்க வேண்டும். எனவே தலைமைச் செயலாளர் முடிவெடுத்து, மதுரை மாவட்டத்திற்கே விடுமுறை அளிக்க வேண்டும். திருப்பரங்குன்றம் பகுதி குறுகிய பகுதியாக உள்ளது. சாமி கும்பிடும் நபர்கள் எப்படி சாமி கும்பிட வருவார்கள் என்று தெரியவில்லை.

 

வெளிப்படைத் தன்மை வேண்டும்

 

திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து வெளிப்படை தன்மையான அறிவிப்பு வெளியாகவில்லை. திருப்பரங்குன்றம் கோயில் சுற்றியுள்ள முக்கிய பகுதிகளில் பணிகள் முடியவில்லை. இருந்த போதிலும் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற வேண்டும். அதே போல் ரோப்கார் சிஸ்டத்தை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு கொண்டு வரவேண்டும். சஷ்டி மண்டபத்தை சரி செய்ய வேண்டும். சாலைகளை தூய்மைபடுத்த வேண்டும். திருப்பரங்குன்றம் கோயிலில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. எனவே அதனை விரைவில் முடிக்க கேட்டுக் கொள்கிறேன்” எனவும் தெரிவித்தார்.