திருக்கோவில் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு - பராமரிப்பு நூலாக்க திட்டத்தின் பணிக்குழுவினர் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சுவடிப் பராமரிப்புப் பணியை மேற்கொண்டனர். அப்போது சுருணை ஏடுகள் மற்றும் நம்மாழ்வாரின் திருவாய்மொழி சுவடிகளுடன் இக்கோவிலில் பாதுகாக்கப்பட்டு வரும் 4 செப்புப் பட்டயங்களையும் கண்டறிந்தனர்.
இதில் 2 மதுரை திருமலை நாயக்கர் காலத்தில் கொடுக்கப்பட்டது. மேலும் செப்புப்பட்டயங்கள் இந்த ஊரில் உள்ள காந்தீஸ்வரம் ஏகாந்தலிங்க சுவாமி கோவிலுக்குச் சொந்தமானவை ஆகும். இந்த செப்புப்பட்டயங்களை படித்து ஆய்வு செய்த சுவடியியல் அறிஞர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் கூறியதாவது: இந்த செப்புபட்டயங்கள் கி.பி.17 மற்றும் 19-ம் நூற்றாண்டு பட்டயங்கள் ஆகும். இதில் முதல் 2 பட்டயங்கள் மதுரை திருமலை நாயக்கர் காலத்திலும், மற்ற 2 பட்டயங்கள் கோவில் நிர்வாகி மற்றும் முக்கியஸ்தரால் இந்த கோவிலுக்கு வழங்கப்பட்டவையாகும். முதல் பட்டயம் கி.பி.1637-ம் ஆண்டைச் சேர்ந்தது.இது திருமலை நாயக்கர், வடமலையப்பப் பிள்ளை ஆகியோருக்குப் புண்ணியமாக காந்தீசுவரம் இறைவன் ஏகாந்தலிங்கத்துக்கு சிறு காலைச் சந்திப்பூசையில் அபிசேகமும் நெய்வேத்தியம் செய்யப்பட்ட வழிபாட்டுச் செலவுக்காக இராமப்பய்யனின் ஆணையின்படி, திருவழுதி வளநாட்டைச் சேர்ந்த முனைஞ்சி என்ற மாகாணியின் காணியாளர்களான நாட்டவர்கள் அதே நாட்டைச் சேர்ந்த திருமலைபுரம் என்ற ஊரின் வருவாயினைக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டு எழுதிக் கொடுத்தாகும்.
2-வது பட்டயத்தில் கி.பி.1671-ல் காந்தீசுவரம் சுவாமி ஏகாந்தலிங்கத்துக்கு பிரதிநாமமாகவும், மகாஜனங்கள், திருமலை நாயக்கர், வடமலையப்பப் பிள்ளை ஆகியோருக்கு புண்ணியமாகவும் விளங்க தர்மதானப் பிரமாணம் வழங்க வல்லநாட்டு நாட்டவருக்கு வடமலையப்ப பிள்ளை கட்டளையிட்டமையால் அவர்கள் கோவிலுக்கு வழங்கிய நிலதானம் மற்றும் அதன் எல்லை பற்றி கூறப்பட்டுள்ளது.
3-வது பட்டயம் கி.பி.1866 ஜனவரி 23-ல் எழுதப்பட்டுள்ளது. இதில் இக்கோவில் தர்மகர்த்தா ஆழ்வார்திருநகர் கோகில சங்கரமூர்த்தி முதலியாரின் மகள்கள் அங்கரத்தையம்மை, ஆவுடையம்மை ஆகிய 2 பேரும் அவர்களின் சந்ததியினரும் கோவிலில் நடைபெறும் தைப்பூச உற்சவத்தின் 4-ம் திருநாள் மண்டகப்படியை தொடர்ந்து வழங்கி நடத்திட வழிவகை செய்யப்பட்டதையும், இந்த குடும்பத்தார் ஏகாந்தலிங்க சுவாமிக்கு வெள்ளித் தகடு பதித்த ரிஷப வாகனம் செய்து கொடுத்ததையும், ரிஷப வாகனம் பாதுகாப்பு அறையின் திறவுகோல் ஒன்று ஆவுடையம்மையின் வளர்ப்பு மகன் தானப்ப முதலியார் என்ற சங்கரமூர்த்தி முதலியாரின் வசம் இருந்தது பற்றியும் கூறப்பட்டுள்ளது. 4-வது பட்டயம் கி.பி.1868 பிப்ரவரி 3-ல் எழுதப்பட்டுள்ளது. இது காந்தீசுவரம் ஏகாந்தலிங்க சுவாமி கோவிலின் விசாரணை கர்த்தாக்களும், ஊர் மக்களும் ஆழ்வார்திருநகரியில் இருக்கும் பிச்சன் செட்டியார் குமாரர் நல்லகண்ணு செட்டியார், சர்க்கரை சுடலைமுத்து செட்டியார் குமாரர் ஆழ்வாரய்யன் செட்டியார் ஆகிய 2 பேரின் பரம்பரையினர் 7-ம் திருநாள் முதற் கால மண்டகப்படியை வழங்கி நடத்தவும், பட்டு கட்டும் மரியாதை பெற்றுக் கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டது குறித்துக் கூறுகிறது.