மகிசாசூரன் எனும் அரக்கன் அப்பாவி மக்களை தொடர்ந்து துன்பத்துக்கு ஆளாக்கி வந்ததால், மலை மகள், அலை மகள் மற்றும் கலை மகள் ஒரு உருவமாக இணைந்து, மகிசாசூரனை வதம் செய்ததாக புராணங்களில் கூறப்படுகிறது. இதுதான் நவராத்திரி விழாவாக வெகு விமர்சையாக கொண்டாப்படுகிறது. இந்த நவராத்திரி விழாவில் முக்கிய நிகழ்வாக இருப்பது கொலு(Navarathri Golu) வைப்பதாகும், அதேபோல், இந்த விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வாக கருதப்படுவது நமக்குள் இருக்கும் நல்ல எண்ணங்களையும் திறமையையும் ஒருங்கிணைத்து, நமக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழிப்பதற்காகவும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. 


நவராத்திரி விழா என்றாலே, கொலு(Navratri Golu) வைத்து வழிபடுவது வழக்கமாக இருக்கிறது. கொலு வைத்து வழிபாடு நடத்துவதாக இருந்தால் அதனை காலங்காலமாக கொலு வழிபாட்டில் பின்பற்றி வந்த முறைப்படி, அடுக்கி வைத்து வழிபடுவது மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.  பலர் தொடர்ந்து வழிவழியாக கொலு வைத்து வழிபட்டு வருவதாகச் சொல்வார்கள், ஆனால் அவர்களும் சில நேரங்களில் கொலு பொம்மை அடுக்கி வைப்பதில் தவறு செய்வது இயல்பானதே. அதனால் தான் இந்த தொகுப்பில் கொலு பொம்மைகளை எப்படி முறையாக அடுக்குவது என விரிவாக கொடுத்துள்ளோம். 


வீட்டில் வைக்கும் கொலுவானது, வீட்டில் உள்ள இட வசதியைப் பொருத்து வைப்பார்கள். அதிலும், மூன்று படிகள், ஐந்து படிகள், ஏழு படிகள், ஒன்பது படிகள் மற்றும் பதினொன்று படிகள் வரை வைக்கலாம். இவ்வாறு வைக்க காரணம், உலகில் உள்ள உயிரினங்கள் எப்படி தோன்றின என்பதை உணர்த்துவதற்காகத்தான் என கூறப்படுகிறது. மேலும், மனிதன் எப்படி தன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவும் படிகள் அமைத்து கொலு பொம்மைகள் வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 


 


கொலுவில் பொம்மைகள் என்பது, உயிரினங்கள் பெற்றிருக்கும் அறிவினைப் பொறுத்து அடுக்கி வைத்து வழிபட வேண்டும். அதாவது ஓரறிவுடைய உயிரினங்கள் முதல் படியிலும், ஈரறிவுடைய உயிரினங்கள் இரண்டாவது படியிலும் என முறையாக அடுக்கி வைக்க வேண்டும். கொலு வைப்பவர்களுக்கு எந்தெந்த உயிரினங்களுக்கு எவ்வளவு அறிவு உள்ளது என்பதில் பலருக்கு குழப்பம் இருக்கலாம், அதுகுறித்து பார்க்கலாம். 


முதல் படி


சின்ன செடி முதல், பெரிய மரம் வரை உள்ள தாவரங்கள் இந்த உலகில் உள்ள ஓரறிவு உயிரினங்கள் ஆகும். எனவே முதல் படியில் செடி, கொடி, மரம் போன்ற பொம்மைகளை வைத்து வழிபட வேண்டும். 


இரண்டாம் படி


ஈரறிவு உடைய உயிரினங்களான நத்தை, சங்கு போன்றவைகளை இரண்டாம் படியில் வைத்து வழிபட வேண்டும். இவைகள் தான் உலகில் உள்ள உயிரினங்களில் ஈரறிவு உயிரினங்கள் ஆகும். 


மூன்றாம் படி


இந்த உலகில் உள்ள உயிரினங்களில் மூவறிவு உடைய உயிரினங்கள் என்பது, எறும்பு, கரையான், அட்டை ஆகும். இவைகளை மூன்றாவது படியில் வைத்து வழிபட வேண்டும். 


நான்காவது படி


நான்கறிவு உடைய உயிரினங்களான நண்டு, தும்பி, வண்டு ஆகியவற்றின் பொம்மைகளை கொலுவில் நான்காவது படியில் வைத்து வழிபட வேண்டும். இவைகளுக்குத்தான் உலகில் உள்ள உயிரினங்களில் நான்கு அறிவு உள்ளது. 


ஐந்தாவது படி


உலகில் உள்ள உயிரினங்களில் ஐந்தறிவு உயிரினங்கள் என்பது விலங்குகளும், பறவைகளும் தான். எனவே கொலுவில் ஐந்தாவது படியில் ஐந்தறிவு உடைய ஜீவராசிகளை வைத்து வழிபாடு நடத்த வேண்டும்.


ஆறாவது படி


ஆறவுடைய மனிதர்களின் உருவ பொம்மைகளை ஆறாவது படியில் வைத்து வழிபாடு நடத்தலாம். அதிலும் குறிப்பாக மனிதர்கள் நடனமாடுவது, வியாபாரம் செய்வது வேறு வேலைகள் செய்வது போன்ற உருவ பொம்மைகளை வைத்து வழிபாடு செய்வர். அதிலும் குறிப்பாக தங்கள் வீட்டில் உள்ளவர்கள் செய்யும் தொழிலின் அடிப்படையில் பொம்மைகள் வைத்து வழிபாடு செய்தால் மிகவும் நல்லது என்ற நம்பிக்கை உள்ளது.


 ஏழாவது படி


மனிதனாக இருந்து மகானாக மாறிய மனித மகான்களின் உருவ பொம்மைகளை வைத்து வழிபடுவதும் இங்கு வழக்கமாக உள்ளது. அதிலும் குறிப்பாக தங்களின் குடும்ப நலனுக்காக தனது வாழ்நாள் முழுவதும் உழைத்து தன்னை அர்பணித்து மறைந்த குடும்ப உறுப்பினர்களின் உருவபொம்மைகளையும் வைத்து சிலர் வழிபாடு நடத்துகின்றனர்.   


எட்டாவது படி


பகவான் விஷ்ணுவின் பத்து அவதாரங்களின் உருவ பொம்மைகளை எட்டாவது படியில் வைத்து வழிபாடு நடத்த வேண்டும். அதாவது தசவதார பொம்மைகளை வைத்து வழிபட வேண்டும். மேலும், அஷ்ட லட்சுமிகளின் உருவ பொம்மைகளை வைத்து வழிபட வேண்டும். 


ஒன்பதாவது படி


ஒன்பதாவது படியில்  முப்பெரும் தேவிகள் என அழைக்கப்படும்  பார்வதி தேவி, சரஸ்வதி தேவி, லட்சுமி தேவி ஆகியோரின் பொம்மைகளும், பூரண கலச கும்பத்தையும் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இதோடு பிள்ளையார் அதாவது விநாயகர் பொம்மையையும் வைத்து வழிபாடு செய்வதும் வழக்கமாக உள்ளது.


இதன் பின்னர் வைக்கப்படும் படிகளில் தெய்வங்களின் உருவ பொம்மைகளை வைத்து வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது. ஒருசில இடங்களில் பூரண கலசத்தை முதல் படியில் வைத்தும் வழிபாடு செய்வது ஒரு சில இடங்களில் வழக்கமாக உள்ளது.