இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. 9 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழா இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கோயில்களிலும் தொடங்கியது. விழாவையொட்டி அந்தந்த கோயில்களில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் கோயில் வளாகத்தில் சாமி உற்சவர் சிலைகள் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதேபோன்று தொடர்ந்து 9 நாட்கள் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற உள்ளது. மேலும், பலரும் தங்கள் வீடுகளில் பொம்மைகளால் கொலு வைத்து ஒன்பது நாட்கள் விரதம் இருந்து சிறப்பு பூஜைகளில் ஈடுபடுவார்கள்.
அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த தருமபுரீஸ்வரர் ஆலயத்தில், பதினெட்டு கைகளுடன் கூடிய அஷ்டதசபுஜதுர்க்கா மகாலெஷ்மி ஆலயத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, 72 -ம் ஆண்டு சதசண்டி யாகம் கடந்த 26-ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. அதன் ஒரு பகுதியாக 3-ம் நாளான இன்று சதசண்டி யாகம் நடைபெற்றது.
யாகத்தில், நவசண்டி யாகம் நவக்கிரக யாகம், பூர்ணாகுதி செய்து மஹாதீபாரானை நடைபெற்றது. தொடர்ந்து தேவி மகாத்மியம், ரிக் யஜூர் சாம அதர்வண வேதங்கள் வாசிக்கப்பட்டன. பின்னர் அம்பாளுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் தருமபுரம் 27 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
குத்தாலத்தில் அரும்பன்னவன முலையம்மை, சமேத உக்தவேதீஸ்வரர் கோயிலில் நவராத்திரி திருவிழா. அம்பாள் அன்னபூரணி அலங்காரத்தில் எழுந்தருள செய்யப்பட்டு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து சிறப்பு தீபாரதனை, ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அரும்பன்னவன முலையம்மை சமேத உக்தவேதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு 3 -ம் திருநாளான இன்று சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் அரும்பன்னவன முலையம்மை அம்பாள் அன்னபூரணி அலங்காரத்தில் எழுந்தருளினார். அங்கு அம்பாளுக்கு பஞ்சமுக சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றது.
விநாயகர், சரஸ்வதி, சிவன், கைலாய காட்சிகள், தசவதார பொம்மைகள் உள்ளிட்ட ஏராளமான நவராத்திரி கொலு பொம்மைகள் காட்சிபடுத்தப்பட்டிருந்தது. பெண்களுக்கு மங்களப்பொருட்கள் வழங்கப்பட்டது. நவராத்திரியை முன்னிட்டு கோயிலில் தோரண வாயில் அமைக்கப்பட்டு மின்னொளியால் அலங்காரம் செய்யப்பட்டு ஜொலித்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும் தொடர்ந்து 9 நாட்கள் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற உள்ளது.