பண்டிகைகள் என்றாலே, உற்சாகம், கோலாகலமாக மற்றும் கொண்டாட்டம் என,அனைவர் உள்ளங்களிலும் ஒரு பரவசம் நிலைத்திருக்கும், ஏனெனில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் ஒருங்கிணைந்து விழாக்களை கொண்டாடுவது,உண்டு மகிழ்வது,ஒருவருக்கொருவர் அளவளாவி மகிழ்வது, என நம்மை உற்சாகப்படுத்தும் விஷயங்கள் நிறைந்திருப்பது ஒரு முக்கிய காரணம்.


அப்படிப்பட்ட பண்டிகைகள் வந்ததும்,  நாம்,நம்மை அலங்கரித்துக் கொள்ள, புது உடைகள்,காலணிகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் என  வாங்குவோம். நம் மீது வைக்கும் கவனத்தை போலவே,வீடுகளை அலங்கரிப்பதிலும், நம் வீட்டுப் பெண்கள்,அதிக கவனத்துடன் இருப்பார்கள்.


வீடுகளை அலங்கரிப்பது என்பது நிறைய விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. அவை என்னவென்று ஒவ்வொன்றாக பார்ப்போம்.


 வண்ணம் தீட்டுதல்:
 நம் வீட்டில் நுழைந்ததும், வெளிச்சமாகவும்,கண்களுக்கு  புத்துணர்ச்சியுடன் இருக்க, முதலில் நம்மை உற்சாகப்படுத்துவது, வீட்டின் வெளிப்புறத்திற்கும் வீட்டின் உள்ளேயும் நாம் பயன்படுத்தும் வண்ணங்கள் ஆகும்.இத்தகைய வண்ணங்கள்,கண்களுக்கு குளிர்ச்சியாக,ஒளி பட்டு எதிரொளிக்கும் படியாக, வெளிச்சமாக,இருக்கும்படி வண்ணங்களை தேர்வு செய்து, உங்கள் சுவற்றினை அழகு படுத்துங்கள்.எப்போது வீட்டுக்குள் நுழைந்தாலும்,இந்த வண்ணங்களை காணும் சமயங்களில்,புத்துணர்வு பெருக்கெடுக்கும்.


கதவு மற்றும் ஜன்னல்களுக்கு திரைச் சீலைகள்:
அழகான, வண்ணமயமான வீட்டிற்கு, மேலும் அழகு சேர்க்க,ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கு திரைச்சீலைகளை சிறப்பானதாக தேர்ந்தெடுங்கள்.


ஒவ்வொரு நிறத்திற்கும், மனிதனுடைய குணாதிசயத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதனால்,அந்த அறையின் தோற்றத்திற்கு ஏற்ப வண்ண மயமான நிறங்களை தேர்ந்தெடுங்கள்,உதாரணமாக,பூஜை அறைக்கு,முழு வெள்ளைக் திரைச்சிலையில்,தங்க நிறத்திலான தீபம் நடுவில் எரிந்து கொண்டிருக்கும் படியாக அமைத்தீர்கள் என்றால், பூஜை அறை என்று தெரிவதுடன், ரசிக்கும்படியாகவும் இருக்கும்.இதே போலவே ஒவ்வொரு அரைக்கும், அந்த அறையின் தன்மைகளுக்கு ஏற்ப, மலர்கள் டிசைன் பதித்த திரைச்சீலைகள் அல்லது டிசைன்கள் அற்ற திரைச்சீலைகள் என தேர்வு செய்வது உங்கள் வீட்டை மேலும் அழகாகும்.


வீடுகளை அழகாக்க செடிகளை பயன்படுத்துங்கள்:
உங்கள் வீடுகளில் நுழையும் வாசல்களில்,மருதாணி அல்லது துளசி செடிகள் உங்கள் வீட்டிற்கு,புது அழகை தரும்.இதே போலவே வீட்டின் உட்புறம் மணி பிளான்ட் மற்றும் கற்பூரவள்ளி வடிவிலான சிறிய செடிகளை ஆங்காங்கே வைப்பது, உங்கள் வீட்டை உயிரோட்டமாகவும் உற்சாகத்துடனும் மாற்றும். இதைப் போலவே ஒவ்வொரு அறைக்கும் தேவையான செடிகளை தேர்ந்தெடுத்து அழகு படுத்துங்கள்.


வீடு முழுவதும்  நறுமணங்களை கமழ செய்யுங்கள்:
கண்களுக்கு எவ்வாறு வண்ணங்களினால் புத்துணர்ச்சி கிடைக்கிறதோ,அதேபோல நறுமணங்களும் நமக்கு புத்துணர்ச்சியை தருகிறது. ஆகவே வீடுகளில் ஏதேனும் ஒரு வாசம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். ஆக குறைந்த செலவில்,ஊதுபத்திகள் சிறந்த நறுமணங்களை தருகின்றன.ஆகவே காலையில் ஒரு முறையும் மாலையில் ஒரு முறையும் வாசனை தரும் ஊதுவத்திகளை பொருத்தி வைப்பதன் மூலம்,முழு நேரத்திற்கும் வீட்டில் அருமையான நறுமணம் கமழும்.


பூக்களை கொண்டு அலங்காரம் செய்யுங்கள்:
தமிழ் கலாச்சாரத்தில் பூக்களுக்கு நிறைய இடம் உண்டு. வீடுகளில் வாசல் தெளித்து,சாணி உருண்டை வைத்து,அதில் பூசணிப்பூவை வைப்பது என்பது தொன்று தொட்டு நமது மரபில் இருந்து வருகிறது.இன்று நகரங்களில் இருக்கும் நிறைய வீடுகளில் இத்தகைய விஷயங்களை செய்வது என்பது சற்றே சிரமம் தான்.இருப்பினும், கடைகளில் கிடைக்கும் தாமரை, சாமந்தி, மற்றும் ரோஜா போன்ற பூக்களில் ஒன்று இரண்டை உங்கள் நிலை வாசலின் இருபுறமும் வையுங்கள்.இதைப்போலவே,வீட்டின் ஹாலில்,ஒரு அகண்ட கண்ணாடி பாத்திரம் அல்லது பித்தளை பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் இந்த பூக்களை தண்ணீர் தெரியாத அளவிற்கு பரப்பி வையுங்கள்.இவை வீட்டுக்குள் வந்ததும் நமக்கு ஆகச் சிறப்பான ஒரு புத்துணர்வை தரும்.


இப்படியாக பண்டிகை காலங்களில் வண்ணங்களாலும், திரைச்சீலை ,பூக்கள் மற்றும் நறுமணங்களாலும் வீடுகளை புதுப்பித்து, உற்சாகத்துடனும், நேர்மறை ஆற்றல்களுடனும்,பண்டிகையை சிறப்பாக கொண்டாடுங்கள்.