நாடு முழுவதும் நவராத்திரி பூஜை சிறப்பாக நடந்து வருகிறது. நவராத்திரி விழாவின் ஒவ்வொரு நாளும் பூஜைகளும், வழிபாடுகளும் சிறப்பாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் ஆயுத பூஜையும், விஜயதசமியும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அமைதி, அன்பின் வடிவமாக காட்சி தரும் துர்க்கை அம்மன் உக்கிரமாக மகிஷாசூமர்த்தினியாக அவதாரம் எடுத்தார்? என்பதை கீழே காணலாம்.
மகிஷாசூரமர்த்தினி:
புராணத்தில் கூறியிருப்பதன்படி, முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே கடும் போர் உண்டானது. அப்போது, மகிஷன் என்ற அரக்கனின் ஆதிக்கம் மிக அதிகமாக இருந்தது. அவன் தேவர்களை வதம் செய்து அவர்களுக்கு தொடர்ந்து கொடுமை செய்து வந்தான்.
இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத தேவர்கள் பிரம்மனிடம் முறையிட்டனர். பிரம்மன் அனைத்திற்கும் ஆதியான சிவபெருமானிடம் முறையிட்டார். சிவபெருமான் தேவர்களின் துன்பத்தை போக்குவதற்காக மகிஷனுக்கு அழிவு என்பது ஒரு பெண்ணால்தான் நேரிடும் என்று அளித்த வரத்திற்கு ஏற்ப, ஒரு பெண் சக்தியை படைத்தார்.
கைகூப்பி வணங்கிய தேவலோகம்:
அதாவது, தன்னுடைய சக்தியில் இருந்து ஒரு ஒளியை உருவாக்கினார். சிவபெருமானைத் தொடர்ந்து விஷ்ணு, பிரம்மா, இந்திரன், வருணன் என அனைத்து கடவுள்களும், தேவர்களும் தங்களது உடலில் இருந்து சக்தியை ஒளியாக கொண்டு வந்தனர். அந்த ஒளியை சிவபெருமான் கொண்டு வந்த ஒளியுடன் கலக்கச் செய்தனர்.
பெண் வடிவில் அந்த ஒளி உருமாறியது. பின்னர். அந்த பெண் சக்திக்கு கடவுள்களும், தேவர்களும் தங்களது ஆயுதங்களை வழங்கினர். அப்பெண் சக்தியே மகிஷாசூரமர்த்தினியாக காட்சி தந்தார். தேவலோகமே கைகூப்பி வணங்கி நின்றது.
சிங்க வாகனத்தில் தோன்றிய மகிஷாசூரமர்த்தினி மகிஷனுடன் போரில் ஈடுபட்டார். பல்வேறு வரங்களைப் பெற்ற மகிஷன் தன்னுடைய அசுரப்படையை ஏவினான். ஆனால், அவனது படைகள் வீழ்ந்தது. தொடர்ந்து பல உருவங்களில் மாறும் ஆற்றல் கொண்ட மகிஷன் எருமை வடிவத்திற்கு மாறி தேவியுடன் போர் செய்தான். தேவி தன்னுடைய திரிசூலத்தால் அந்த எருமை தலையை வெட்டி வீழ்த்தினார். இதனால், மகிஷனும் வதம் செய்யப்பட்டான்.
நவராத்திரி விழா:
தேவர்களுக்கும், பூலோகத்திற்கும் தீங்கு செய்து வந்த மகிஷனை வதம் செய்த தேவி மகிஷாசூரமர்த்தினி என்று அனைவராலும் போற்றி வணங்கப்படும். மகிஷனுக்கும், தேவிக்கும் போர் நடந்த அந்த 9 நாட்கள் நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது. இவ்வாறு புராணங்களில் கூறப்படுகிறது. மகிஷாசூரமர்த்தினியின் புகழைப் போற்றும் விதமாகவே மகிஷாசூரமர்த்தினி ஸ்தோத்திரம் புகழ் பாடப்படுகிறது.