இந்தியாவில் இந்துக்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக நவராத்திரி உள்ளது. நவராத்திரி பண்டிகையாக வட இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கோலாகலமாக கொண்டாடப்பட்டாலும் தமிழ்நாட்டில் நவராத்திரியின் கடைசி நாள் ஆயுத பூஜையாகவும், அதற்கு அடுத்த நாள் விஜயதசமியாகவும் தமிழ்நாட்டில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.



பிறந்தது நவராத்திரி:


நடப்பாண்டிற்கான நவராத்திரி பண்டிகை இன்று தொடங்குகிறது. இதையடுத்து, காலை முதல் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் கொண்டாடப்படுகிறது. 9 நாட்கள் கொண்டாடப்படும் இந்த நவராத்திரி பண்டிகை பெண் சக்தியைப் போற்றும் விதமாகவே கொண்டாடப்படுகிறது. பெண் சக்தியை போற்றும் நவராத்திரி எப்படி உருவானது என்பதை கீழே விரிவாக காணலாம்.


ஏன் கொண்டாடப்படுகிறது?


படைக்கும் கடவுளாக போற்றப்படும் பிரம்மாவை நோக்கி மகிஷாசுரன் தவம் செய்தான். அவனது தவத்தை கண்டு வியந்த பிரம்மா அவனுக்கு வரம் கேட்டபோது அவன் சாகா வரம் கேட்டான். அப்போது, சாகா வரத்தை ஒரு நிபந்தனையுடன் பிரம்மன் அவனுக்கு அருளினார். உன்னை ஒரு பெண் மட்டுமே வீழ்த்த முடியும் என்று வரம் அளித்தார்.

பிரம்மனிடம் வரம் பெற்ற மகிஷாசுரன் எந்த பெண்ணால் தன்னை வீழ்த்த முடியும் என்ற ஆணவத்தில் தன் படைகளை வைத்து மக்களை கொடுமைப்படுத்தினான். மக்களை கொடுமைப்படுத்தி, அடிமைப்படுத்தி அவர்களை தொடர்ந்து துன்புறுத்தி வந்தான்.

துர்கா தேவி:


அவனது கொடுமைகளில் இருந்து மக்களை காக்க மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா முடிவு செய்தனர். பின்னர், பெரும் சக்திகளின் சொரூபமாக துர்கா தேவியை உருவாக்கினர். சகல சக்திகளின் சொரூபமாக மகா காளியாக அவதாரம் எடுத்த துர்காதேவியிடம் மகிஷாசூரன் போர் செய்தான்.


மகா வலிமை கொண்ட மகிஷாசூரன் ஒவ்வொரு ரூபத்தில் துர்கா தேவியிடம் போர் செய்தான். அவனிடம் முழு சக்தியையும் கொண்டு துர்காதேவியும் போர் புரிந்தார். 9 நாட்கள் தொடர்ந்து நடந்த இந்த யுத்தத்தில் துர்கா தேவி தனது பேராற்றலை கொண்டு போர் புரிந்தார். போரின் 10வது நாளில் மகிஷாசூரன் எருமை ரூபம் கொண்டு போர் புரிந்தான். எருமை ரூபத்தில் வந்தபோது மகிஷாசூரனை துர்காதேவி வீழ்த்தி அதர்மத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

பெண் சக்தி:


அநீதிகளையும், அதர்மத்தையும் எதிர்த்து பெண் சக்தி போராடியதையே நவராத்திரியாக கொண்டாடப்படுவதாக புராணங்கள் கூறுகிறது. இந்த நவராத்திரியின் புராணக் கதைகள் உணர்த்தும் உண்மை பெண்கள் தங்கள் சக்தியை உணர்ந்து போராடி வெல்ல வேண்டும் என்பதே ஆகும். இதன் காரணமாகவே, அம்பிகை வெற்றி பெற்ற 10வது நாளை விஜயதசமியாக கொண்டாடுகிறோம்.


இன்று நவராத்திரி பிறந்துள்ள நிலையில் வரும் 11ம் தேதி ஆயுத பூஜையும், 12ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது.