பண்டிகைகளால் நிரம்பியது தான் இந்தியக் கலாச்சாரம். ஆண்டு தோறும் ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு தனிச் சிறப்பான பண்டிகை வந்துவிடும். அப்படியாக இந்துக்கள் பண்டிகைகளில் நவராத்திரி பண்டிகை மிகவும் பிரம்மாண்டமானது. இந்த ஆண்டு நவராத்திரி கொண்டாட்டம் செப்டம்பர் 26, 2022 இல் தொடங்கி அக்டோபர் 5, 2022 அன்று முடிவடைகிறது. ஒன்பது நாள் திருவிழாவாக கொண்டாடப்படும் நவராத்திரி ,துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை வணங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.


நவராத்திரி என்பது சமஸ்கிருத வார்த்தையாகும், இது 'ஒன்பது இரவுகள்' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் மொத்தம் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன. அவற்றில் இரண்டு பெரிய அளவிலான கொண்டாட்டங்கள் மக்களால் கடைபிடிக்கப்படுகிறது. சைத்ர நவராத்திரி, வசந்த காலத்தில் வருகிறது மற்றும் சரத் நவராத்திரி இந்தியாவில் இலையுதிர் காலத்தின் வருகையைப் பின்பற்றுகிறது. ஷரத் (அல்லது ஷரதியா) நவராத்திரியும் சைத்ரா நவராத்திரியின் அதே மத பழக்கவழக்கங்களைப் பின்பற்றுகிறது.


நவராத்திரி விரதம் கடைபிடிக்கும் முறைகளை சாஸ்திரம் விவரமாக விளக்கியுள்ளது. அதில் உணவுப் பழக்கவழக்கமும் முக்கியத்துவம் பெறுகிறது. பொதுவாகவே இந்த 9 நாட்களிலும் வெங்காயம், பூண்டு தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது.


உணவும் இந்து மதமும்:
இந்து மதத்தில் உணவு வகைகள் மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. அவை ராஜசிக் உணவு, தாமஸிக் உணவு, சாத்விக் உணவு என்று மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ராஜசிக் உணவானது, அதிகப்படியான புளிப்பு மற்றும் உப்பு நிறைந்த உணவாக உள்ளது.  தாமஸிக் உணவு, பழமையான மற்றும் சுவையற்ற உணவாக உள்ளது இது யோகிகள் கணித்து வகைப்படுத்தியது. ராஜசிக் உணவும் தாமஸிக் உணவும் ஆன்மீக தேடல் உள்ளவர்களால் ஏன் தவிர்க்கப்படுகிறது தெரியுமா? அவை புலன் உணர்வுகளைத் தூண்டும், மதி மயக்கத்தை உண்டாக்கும். அதனாலேயே அவை தவிர்க்கப்படுகின்றன. அதனாலேயே வெங்காயமும், பூண்டும் விரத காலங்களில் முக்கியமாகத் தவிர்க்கப்படுகின்றன.


சாத்விக் உணவு என்றால் என்ன?
சரி ராஜசிக், தாமஸிக் உணவுகள் பற்றி சொல்லிவிட்டீர்கள் சாத்வீக உணவு என்றால் என்னவென்று நீங்கள் வினவுவது புரிகிறது. பகவத் கீதையில் உள்ள கூற்றுப்படி, பாரம்பரிய சாத்வீக உணவு மிகவும் எளிமையான உணவாக கருதப்படுகிறது. அதாவது வளமான மண்ணில் அந்தந்த பருவத்திற்கு ஏற்ப இயற்கையான முறையில் விளைவிக்கப்படுபவை. இவற்றில் ரசாயன உரங்கள் இருக்காது. பழங்கள் இயற்கையாகவே பழுக்கவிடப்படும். விலங்குகளை கொல்வது அல்லது அதற்கு தீங்கு விளைவிப்பதன் மூலம் கிடைக்கக்கூடிய எந்தவொரு உணவையும் இது தவிர்க்கிறது. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் கொட்டைகள் ஊட்டச்சத்து நிறைந்த உணவே சாத்வீக உணவாகும். இ


ந்த சாத்விக் உணவானது, மனதையும் உடலையும் சுத்தப்படுத்தும் என்று ஆன்மீகப் பெரியோர்களால் நம்பப்படுகிறது. அதனால் இது, உகந்த மனதையும் உடலையும் சீராக இயங்கச் செய்யும். சலனமின்றி வைத்திருக்கும். மேலும், சமைத்து முடித்த மூன்றில் இருந்து நான்கு மணி நேரத்திற்குள் உட்கொள்ளும் உணவே சாத்வீக உணவு. ஆகையால் காலையில் சமைத்ததை இரவிலும், இரவில் சமைத்ததை மறுநாள் உண்ணக்கூடாது. சாத்வீக உணவுகளை உட்கொள்ளும் போது வாழ்வியல் நோய்களை விலக்கிவைக்கும். சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், சரும, கேச பாதிப்புகள் அகலும். எனவே சாத்வீக உணவு நவராத்திரி காலம் மட்டுமல்லாமல் எப்போதுமே சாப்பிட உகந்ததாகும்.