சக்தி ஸ்த்லங்களில் ஒன்றாக போற்றப்படும் உலக புகழ்பெற்ற காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் மாதம்தோறும் அமாவாசை நல்நாளில் தங்க திருத்தேர் உற்ச்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் புரட்டாசி அமாவாசை நல்நாளான நேற்று காமாட்சி அம்பாள் லஷ்மி,சரஸ்வதி தேவிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையானது நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு காமாட்சி அம்மன் சிகப்பு நிற பட்டாடை உடுத்தியும் லஷ்மி சரஸ்வதி தேவியர்களுக்கு கத்ரிபூ பட்டாடைகள் உடுத்தியும், தங்க, வைர, வைடூரிய ஆபரணங்கள் அணிந்து செம்பங்கி பூ, விரிச்சை மலர் மாலைகள் அணிந்து தங்க தேரில் எழுந்தருளிய காமாட்சியம்மனுக்கு தூப தீப ஆராதனைகள் நடைபெற்று பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க திருகோயில் உள்பிரகாரத்தினை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு ஓம் சக்தி பராசக்தியென காமாட்சியம்மனை மனமுறுகி வேண்டி வழங்கி வழிபட்டு சென்றனர்.

 



 

காஞ்சி காமாட்சி வரலாறு

 

 காமாட்சி என்றால் கருணையும், அன்பும் நிறைந்த கண்களையுடையவள் என்றும் பொருள் உண்டு. இத்தகு பெருமைகளைத் தன்னகத்தே கொண்ட காஞ்சி மாநகரத்தில் அன்னை காமாட்சி தேவி எழுந்தருளிய சம்பவம் ஒரு ஆற்றல்மிக்க வரலாறாக விரிகின்றது. முன்னொரு காலத்தில், பந்தகாசுரன் என்ற ஓர் அசுரன் வாழ்ந்து வந்தான். அவன் மிகக் கடுமையான தவங்களை மேற்கொண்டு, பிரம்ம தேவரிடமிருந்து அரிய பல வரங்களைப் பெற்றிருந்தான்.



 

அந்த வரங்கள் அளித்த சக்தியாலும், ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும் கைப்பற்றித் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பலவித துன்பங்களை உண்டாக்கி வந்தான். பந்தகாசுரனின் கொடுமைகள் நாள்தோறும் அதிகமாகி வந்ததால், அதிக துன்பமுற்ற தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று தங்கள் துன்பத்தைக் கூறி முறையிட்டார்கள். பிரம்மாவின் வரங்களைப் பெற்றதால் பந்தகாசுரன் மிகுந்த வலிமை பெற்றிருப்பதை உணர்ந்த சிவபெருமான், “அந்தப் பந்தகாசுரனை அழிக்கும் ஆற்றல் அன்னை பராசக்தி தேவிக்குதான் உள்ளது“ என்று கூறி, அவர்களைப் பராசக்தியிடம் அனுப்பி வைத்தார். அத்தருணம், அன்னை பராசக்தி தேவி, காம கோட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், கிளி வடிவம் கொண்டு, ஒரு செண்பக மரத்தில் அமர்ந்து சிவபெருமானைக் குறித்து தவம் செய்து கொண்டிருந்தாள்.



 

தேவர்களும், முனிவர்களும் அன்னை இருக்கும் இடத்துக்கு வந்து, அவளை வழிபட்டுத் தங்கள் துயரங்களைக் கூறினார்கள். அவர்களின் துன்பத்தைக் கண்டு மனம் இரங்கிய அன்னை, பந்தகாசுரனைக் கொன்று, அவர்களின் துயரத்தைத் தீர்ப்பதாக உறுதியளித்தாள். அத்தருணம், பந்தகாசுரன் கயிலாயத்தில், ஒரு இருண்ட குகையினுள்ளே, ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை அறிந்து, அவனைக் கொல்ல அதுவே தருணம் என்று முடிவு செய்த அன்னை, பதினெட்டுக் கரங்களில், பதினெட்டு வகையான ஆயுதங்களைத் தாங்கிய பைரவ ரூபிணியாக, உக்கிர உருவம் கொண்டாள்.



 

பந்தகாசுரனின் கழுத்தில் ஒரு பாதத்தையும், மார்பில் ஒரு பாதத்தையும் வைத்து, அவனது தலையை அறுத்து, ஒரு கையில் தூக்கிப் பிடித்தபடி காஞ்சிபுரம் வந்தடைந்தாள். உக்கிர கோப ரூபத்தில் வந்த அன்னையைக் கண்ட தேவர்களும், முனிவர்களும் பயத்தில் நடுங்கி மயங்கி வீழ்ந்தனர். அவர்களின் பயத்தைப் போக்க விரும்பிய அன்னை, உடனே, அழகிய பட்டாடை அணிந்த சிறு பெண்ணின் உருவத்தில், புன்னகை தவழும் முகத்துடன் அவர்களுக்குக் காட்சியளித்தாள்.

 



காஞ்சிபுரத் திருத்தலத்திலுள்ள எல்லா சிவாலயங்களுக்கும் காமாட்சி அம்பாளே மூலவர் அம்பாளாக விளங்குகிறாள். இதனால் காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களில், அம்பாளுக்குத் தனி சந்நிதிகள் இருப்பதில்லை. அம்பாளின் உற்சவ மூர்த்திகள் மட்டுமே எல்லா சிவாலயங்களிலும் காட்சியளிக்கின்றனர். மூல மூர்த்தியான காமகோடி காமாட்சியின் இடது பக்கத்தில் வட திசை நோக்கியவாறு அரூப லட்சுமியாகிய அஞ்சன காமாட்சி காட்சியளிக்கின்றாள். இது அன்னையின் சூட்சும வடிவமாகும். இந்த அன்னைக்கு வடிவம் கிடையாது.