புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இதையொட்டி நீர் நிலைகளில் புனித நீராடிய பக்தர்கள் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் மகாளய அமாவாசை தினத்தையொட்டி இன்று அதிகாலை முதலே பல ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்கள் நினைவாக வழிபட்டு தர்ப்பணம் கொடுத்தனர். தாய், தந்தை, பாட்டனார், முப்பாட்டனார் என்று முன்னோர்களை நினைத்து அவர்களின் பெயர்களை கூறியும், நினைத்தும் புரோகிதர்கள் மூலம் எள், தர்ப்பண நீர், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு ஆகியவற்றையும் வைத்து வழிபட்டனர். முன்னதாக பக்தர்கள் காவிரி ஆற்றில் இறங்கி புனித நீராடினர். பின்னர் அங்குள்ள காவிரி அம்மன் கோவில் முன்பு விளக்கேற்றி வழிபட்டனர். இதேபோல் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் அமைந்துள்ள கருட மண்டபத்திலும் ஏராளமானோர் திரண்டு சிவாச்சாரியார்கள் மூலம் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். ஏராளமானோர் குவிந்ததால் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர்களை ஒரே இடத்தில் அமர வைத்து இந்த தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் முசிறி, தொட்டியம், துறையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காவிரி பாயும் இடங்கள் மற்றும் நீர் நிலைகளில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்தனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நீர் நிலைகள் மற்றும் கோவில் வளாக பகுதிகளில் முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பலர் மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர் வழிபாடு நடத்த முடியாமல் போனது. அவர்கள் தங்களது வீடுகளிலேயே வழிபாடு நடத்தினர். தற்போது எந்தவித தடையும் இல்லாததால் திரளானோர் நீர் நிலைகளில் குவிந்தனர். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக நோய் பரவல் காரணமாக எங்கள் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய முடியாமல் போனது. அவர்களின் திதி நாட்களை மறந்தபோதிலும், இதுபோன்ற மகாளய அமாவாசை, தை அமாவாசை தினங்களில் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவோம். தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் செல்வதால் புனித நீராடி, மன நிறைவுடன் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு உள்ளோம். இதன் மூலம் எங்களின் மனக்குறைகள் நீங்கிவிட்டது. எங்கள் குலம் செழிக்கும் என்று நம்புகிறோம் என்றனர்.
மேலும் இன்று மகாளய அமாவாசை தினத்தையொட்டி சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மாலை 4 மணிக்கு சமயபுரம் மாரியம்மனுக்கு மகா அபிஷேகம், சந்தனாதி தைலம், திரவியப்பொடி, பச்சரிசி மாவு பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம், பழ வகைகள் போன்ற 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்படுகிறது. அதன்பிறகு மகா தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு மாரியம் மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெறுகிறது. முன்னதாக சமயபுரம் கோவிலை சுற்றியுள்ள கங்கா தீர்த்தம், சர்வேஸ்வரன் தீர்த்தம், அம்மன் தீர்த்தம், கோவில் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் இன்று காலை பக்தர்கள் புனித நீராடி அம்மனை வழிபட்டனர்.