Navratri 2022:  நவராத்திரி விழா இம்மாததின் 26ஆம் தேதி தொடங்கவுள்ளது. ஒவ்வொருவரும் தங்களின் விருப்பப்படி, ஆறு முதல் பத்து நாட்கள் வரை கொண்டாடுகின்றனர். நவராத்திரி வந்து விட்டாலே, அதனை கொண்டாடும் மக்களிடத்தில்  விழாக்கோலம் பூண்டு விடுவது இயல்பு தான். குறிப்பாக, துர்காதேவியின் தாய்பூமி என அழைக்கப்படும் கொல்கத்தாவில் கோலாகல கொண்டாட்டம் காணப்படும். ஆனால், இந்த  விழாக்காலத்தில் அனைவரும் ஏன் விழா கொண்டாடப்படுகிறது? எவ்வாறு கொண்டாடப்படுகிறது? கொலு எவ்வாறு வைக்கப்படுகிறது என்பது குறித்தெல்லாம் பெரிதாக தெரிந்து கொள்ளாமல், முன்னோர்கள் வழிபடுகிறார்கள், நானும் வழிபடுகிறேன் என வழிபடுபவர்கள் தான் இங்கு அதிகம்.




இதற்கான விளக்கங்களை தரும் விதமாக ஏற்கனவே நாம் பார்த்துவிட்டோம்.  இந்த கட்டுரையில் நவராத்திரியின் முதன்மை தெய்வமாக இருக்க கூடிய மூன்று தேவிகளின் ஓர் உருவமாய் இருக்க கூடிய துர்கா தேவி சிலை எவ்வாறு செய்யப்படுகிறது என்பதை காணலாம். 


நவராத்திரியின் நாயகியாக உள்ள துர்கா தேவி சிலைகள் தான் கொல்கத்தாவின் எல்லா சாலைகளிலும் நிரம்பி இருக்கிறது.  ஒரு தெய்வத்தின் சிலை எவ்வாறு செய்யப்படும் எனக் கேட்டால், மண்ணில் தானே என நாம் பதில் கூறலாம். ஆனால் அது எந்த மண்ணில் என்பது தான் இந்த கட்டுரை உருவாக காரணமே. ஆனால் துர்கா தேவியின் சிலை செய்வதற்கு என்று ஒரு பாரம்பரிய முறை உள்ளது. இந்து பாரம்பரியத்தின் படி, துர்கா தேவியின் சிலையை தயாரிக்கும் போது, ​​நான்கு விஷயங்கள் மிக முக்கியமானவையாக கருதப்படுகிறது. 


இதில் கங்கை கரையில் இருந்து வரும் சேறு, மாட்டு சாணம், மாட்டு சிறுநீர் மற்றும்  பாலியல் தொழில் நடைபெறும் விடுதிகளில் இருந்து வரும் மண் ஆகியவை அடங்கும். ஆச்சரியமாக இருக்கிறது தானே! இவ்வாறு துர்கா தேவியின் சிலைகளைச் செய்வது தான் முறை எனவும் கருதப்படுகிறது. இதனை இது 'நிஷிதோ பாலிஸ்' என்று அழைக்கிறார்கள்.  இந்த முறையில் செய்யப்படாத சிலைகள் முழுமையடைந்த சிலைகளாகவே கருதப்படுவதில்லை. மேலும், இவற்றோடு சேர்ந்து, கொல்கத்தாவில் உள்ள புனித நதி எனப்படும், ஹூக்லி நதியில் இருந்து மண் எடுத்து செய்யப்படுகிறது.


இவற்றில் ஆச்சரியத்தினை ஏற்படுத்தும் விதமாக இருப்பது, பாலியல் தொழில் செய்பவர்களால் வணங்கி தரப்படும் மண் தான்.  இந்த மண் புனிதமான மண் என அழைக்கப்படுகிறது. இந்த மண் பாலியல் தொழிலாளிகளிடம் இருந்து பிச்சை பெற்று வந்து சிலை செய்ய வேண்டும். ஆரம்ப காலகட்டத்தில் பூசாரிகளால் இவ்வாறு மண் சேகரிக்கப்பட்டது. ஆனால் இப்பொழுதெல்லாம், சிலைகளின் தேவை அதிகமாகி இருப்பதால் சிலைகள் செய்பவர்களே மண்ணை தானமாக பெற்று வந்து சிலைகள் செய்கின்றனர். பாலியல் தொழில் நடக்கும் தடைசெய்யப்பட்ட பாதைகளுக்குச் செல்லும் மக்கள் தங்கள் நல்லொழுக்கத்தையும் பக்தியையும் வீட்டு வாசலில் விட்டுவிட்டு சரீர ஆசைகள் மற்றும் பாவங்களின் உலகில் நுழைவதால் இந்த மண் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும்  கருதப்படுகிறது.


இது தவிர துர்கா பூஜையின் போது துர்கா பூஜையின் போது நவ்கன்யாக்கள் எனப்படும் ஒன்பது இளம் கன்னிப் பெண்களை வணங்க வேண்டும் என்றும் நம்பப்படுகிறது. ஒரு நாட்டி (நடனக் கலைஞர்/நடிகை), வைஷ்யா (பாலியல் தொழிலாளி), ராஜகி (சலவைப் பெண்), ஒரு பிராமணி (பிராமணப் பெண்), ஒரு சூத்திரன், ஒரு கோபாலா (பால் பணிப்பெண்) நவகாண்யாக்கள் என்று அழைக்கப்படும் பெண்கள். நம்பிக்கையின்படி, இந்தப் பெண்களுக்கு மரியாதை செலுத்தாமல் பத்து ஆயுதம் கொண்டுள்ள துர்கா தேவி வழிபாடு முழுமையடையாது.