"நவராத்திரி விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாநகரம் திருவிழாக்குளம் பூண்டுள்ளது"
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில்
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நவராத்திரி விழா, பொதுவாக அம்மன் கோவில்களில் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆனால், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலிலும், நவராத்திரி விழா ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், புரட்டாசி மாதத்தின் முதல் நாளான இன்று, நவராத்திரி உற்சவத்தின் தொடக்க விழா வெகு கோலாகலமாக நடைபெற்றது.
வரதராஜ பெருமாள் மற்றும் தாயார் ஊஞ்சல் சேவை விழாவின் முதல் நாளான நேற்று, வரதராஜ பெருமாள் மற்றும் பெருந்தேவி தாயார் இருவரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். சிவப்பு பட்டு உடுத்தி, பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெருமாளும் தாயாரும், கோவிலின் புகழ்பெற்ற நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.பின்னர்,மேளதாளங்கள் முழங்க, வேத பாராயணங்கள் ஓத, பெருமாளுக்கும் தாயாருக்கும் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.
திரளான பக்தர்கள் தரிசனம் ஊஞ்சல் சேவையின்போது, பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து, வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டு, நெய்வேத்தியங்கள் படைக்கப்பட்டன. இந்த விழாவில், காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, பெருமாளின் அருளைப் பெற்றனர். வரும் ஒன்பது நாட்களுக்கும், ஒவ்வொரு நாளும் வரதராஜ பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்குக் காட்சியளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில்
புகழ்பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி உற்சவம் வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம் இதனை ஒட்டி அழகிய பொம்மைகளால் கொலுவைத்து அலங்கரிக்கப்பட்ட கொலுமண்டபத்தில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்.
நாள்தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி உற்சவத்திற்கான முதல் நாளான நேற்று காமாட்சியம்மன் லட்சுமி சரஸ்வதி தேவிகளுடன் பல்வேறு மலர் மாலைகள் அணிந்து, ஏலக்காய் திராட்சை மாலை அணிந்து வைரம் வைடூரியம் அணிந்த பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பின்பு கோவில் வளாகத்தில் காமாட்சி அம்மன் லட்சுமி சரஸ்வதி தேவியுடன் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் கொலு மண்டபத்தில், ஊஞ்சல் சேவையில் எழுந்தருளிய காமாட்சி அம்மனுக்கு சிறப்பு தீப தூப ஆராதனை நடைபெற்றது. ஊஞ்சல் சேவையில் எழுந்தருளிய காமாட்சி அம்மனை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் படவேட்டம்மன் கோயில்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஐயப்பன் நகரில் உள்ள தாய் படவேட்டம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்தாண்டு நவராத்திரி உற்சவம் கடந்த ஞாயிற்று கிழமை முதல் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது.
தினந்தோறும் படவேட்டம்மன் பல்வேறு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். நவராத்திரியில் 3- ஆம் நாளான நேற்று தாய் படவேட்டம்மன் மெயில்தோகை விரித்தபடி முருகன் கோலத்தில் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. கோவில் தர்மகத்தா சார்பில் விழா குழுவினர்கள் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.