Narasimha Jayanthi : நரசிம்ம ஜெயந்தி என்பது மகா விஷ்ணுவின் 4வது அவதாரத்தை கொண்டாடும் வகையில் கடைபிடிக்கப்படுகிறது. மகா விஷ்ணு எடுத்த அவதாரங்களில் மிகவும் சிறப்புக்குரிய அவதாரமாக பார்க்கப்படுவது நரசிம்ம அவதாரம். கேட்பதை விட அதிகமாகவே அள்ளிக் கொடுக்கும், அதுவும் கேட்ட மாத்திரத்திலேயே கொடுக்கும் நரசிம்ம மூர்த்தி அவதரித்த தினத்தை நரசிம்ம ஜெயந்தியாக நாம் கொண்டாடுகிறோம்.
இது ஒவ்வோர் ஆண்டும் வைகாசி மாதம் வரும் சதுர்தசி திதியில், சுக்ல பக்ஷத்திலில் வருகிறது. நரசிம்மம் என்ற பதம் சமஸ்கிருதத்தில் இருந்து வந்துள்ளது. சிம்மம் என்பது சிங்கத்தை குறிக்கும். நர என்பது மனிதனைக் குறிக்கும். பாதி மனிதன், பாதி சிங்கம் தான் இதன் அர்த்தம்.
இந்தியாவின் சில பகுதிகளில் நரசிம்ம ஜெயந்தியை வைசாக சுக்ல சதுர்தசியில் கொண்டாடுகின்றனர். இந்த நன்நாளில் பூஜை மேற்கொள்ள வேண்டிய நேரம், நரசிம்ம ஜெயந்தியின் பெருமைகளை அறிந்து கொள்வோமாக.
நரசிம்ம ஜெயந்தி 2023: நேரமும், தேதியும்..
இந்த ஆண்டு நரசிம்ம ஜெயந்தி மே 04 ம் தேதி வருகிறது. சித்திரை மாதம் சதுர்த்தசியும், சுவாதி நட்சத்திரமும் கூடிய பிரதோஷ காலத்திலேயே நரசிம்மர் அவதாரம் எடுத்தார். சதுர்த்தசி திதி மே 03 ம் தேதியே துவங்கி இருந்தாலும் மே 04 ம் தேதியே நரசிம்மர் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
பஞ்சாங்கத்தின்படி சதுர்தசி திதியானது மே 3 இரவு 11.49 மணிக்கு தொடங்குகிறது. இது மே 4 இரவு 11.44 மணி வரை இருக்கும். நரசிம்மரை வணங்கி சயன கால பூஜை செய்ய மாலை 4.18 மணி முதல் மாலை 6.58 வரை நல்ல நேரமாகும். பரண நேரமானது அடுத்த நாள் அதாவது மே 5 காலை 5.37 மணிக்கு தொடங்கும். மத்யாண சங்கல்ப நேரமானது மே 4 காலை 10.58 மணிக்கு தொடங்கி மதியம் 1.38 மணிக்கு முடியும்.
நரசிம்ம ஜெயந்தி 2023: கதை
இந்து புராணங்களின்படி பிரஹலாதன் என்ற விஷ்ணு பக்தன் தனது தந்தை ஹிரண்யகசிபுவை எதிர்த்து ஹரி நாமம் உச்சரிக்கிறான். என்ன செய்தாலும் தீவிர ஹரி பக்தனாக இருக்கும் மகனை கொலை செய்ய ஹிரண்யகசிபு உத்தரவிடுகிறான். அந்த முயற்சியின்போது மகா விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யகசிபுவை வதம் செய்கிறார். சாகா வரம் பெற்றிருந்த ஹிரண்யகசிபுவை அவன் பெற்ற வரத்தின் சூட்சமத்தின் வழியேயே வதை செய்கிறார் விஷ்ணு. காலையும் இல்லாமல் இரவும் இல்லாமல், வீட்டினுள்ளும் இல்லாமல் வெளியிலும் இல்லாமல், மனிதராலும் இல்லாமல் விலங்கினாலும் இல்லாமல் ஒரு வடிவத்தில் ஹிரண்யகசிபு வதை செய்யப்படுகிறான். தீயதை நன்மை வெல்லும் என்பதுதான் இந்த அவதாரத்தின் படிப்பினையாகும்.
நரசிம்ம ஜெயந்தி மந்திரம்:
நரசிம்ம ஜெயந்தி அன்று நரசிம்மர் மந்திரத்தை உச்சரிப்பதால் பாவங்களில் இருந்து விடுபடலாம் என்று கூறப்படுகிறது.
நரசிம்மர் ஜெயந்தி அன்று அதிகாலையில் எழுந்து, வீட்டில் விளக்கேற்றி, பாலும், பானகமும் நைவேத்தியமாக படைத்து நரசிம்மரை வழிபட வேண்டும். அருகில் நரசிம்மர் கோவில் இருந்தால் அங்கு சென்று வழிபடலாம். மாலையில் 6.30 மணிக்கு மேல், 07.30 மணிக்குள் நரசிம்மர் வழிபாட்டை செய்வது சிறப்பானது. கடன் தொல்லை, பணப் பிரச்சனை, வறுமை, பணம் சேராமல் செலவழிந்து கொண்டு உள்ளது, எதிரிகளால் தீராத தொல்லை, பல காலமாக தீராத வழக்கு என எப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிட்டும்.
ஓம் நரசிம்மஹயே வித்மஹே வஜ்ரானகயா தீமஹி தன்நோ சிம்ம ப்ரஜோதயாத் |
வஜ்ர நாகாய வித்மஹே திஷ்ன தம்ஸ்த்ராய தீமஹி தன்நோ நரசிம்ஹ பிரஜோதயாத் |
என்ற இந்த மந்திரத்தை சொல்ல பாவங்கள் தீரும், தீமைகள் அகலும், நன்மைகள் பெருகும்.