மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சித்தமல்லி கிராமத்தில் ஸ்ரீ காமாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி ஆலயம் மற்றும் ஸ்ரீ தேவி ஸ்ரீ பூமிதேவி சமேத சுந்தர நாராயண பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. நந்தி தேவரின் சிஷ்யரான திருமூலர் என்ற சித்தர் கொள்ளிடம் நதியின் தென் கரையில் மல்லிகை பூக்கள் நிறைந்த பகுதியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்து, கைலாசநாதர் அருளைப் பெற்ற தலம் சித்தமல்லி கிராமம் என தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போல் வேண்டியவருக்கு வேண்டும் வரங்கள் அனைத்தும் தந்து எட்டரை அடி உயரத்தில் தாயாருடன் விஸ்வரூ பமாக அருள்பாலிக்கும் ஸ்ரீ தேவி பூமிதேவி சமேத சுந்தரநாராயண பெருமாள் கோயில் காவேரி ஆறு உத்தரவாஹினி தீர்த்தக்கரையில் அமைந்துள்ளது. இவ்வாலயங்களில் மகா கும்பாபிஷேகம் நாளை 4 -ம் தேதி காலை 8.45 மணிக்குமேல் 9.45 மணிக்குள் கைலாசநாதர் கோயிலிலும், 9.45 மணிக்குமேல் 10.50 மணிக்குள் ஸ்ரீ தேவி பூமிதேவி சமேத சுந்தரநாராயண பெருமாள் கோயிலிலும் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு கடந்த 1-ம் தேதி 6 கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நான்காம் கால யாகசாலை பூஜையில் திருவாரூர் தியாகராஜர் சுவாமி ஆலய பெட்டகத்தில் பாதுகாப்பு கருதி வைக்கப்பட்ட இரண்டு கோயில்களின் சுவாமி பஞ்சலோக சிலைகள் கொண்டுவரப்பட்டு கிராமத்தில் வீதியுலாவாக எடுத்துவரப்பட்டு யாகசாலையில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று மகாபூரணாகுதி தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தாகள் கலந்து கொண்டனர். 23 ஆண்டுகளுக்குப்பிறகு கோயிலின் உற்சவர் சிலைகள் ஆலயம் வந்துள்ளதால் கிராமமகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்