உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.  கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் நிறைவு பெற்ற கோயில்களுக்கு தமிழக அரசால் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், கடந்த 2008 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்ததால், கும்பாபிஷேகத்தை விரைவாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூபாய் 67 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி மற்றும் நன்கொடையாளர்கள் அளித்த நிதி மூலம், கோயிலில் திருப்பணிகள் கடந்த 8 மாதமாக நடைபெற்று வந்தது. திருப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. 



இதையொட்டி கும்பாபிஷேக ஏற்பாடுகள் கடந்த ஒரு மாத காலமாக கோயிலில் நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி, நாமக்கல் நரசிம்மர் சுவாமி கோயில் வளாகத்தில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு யாக சாலை பூஜைகள் நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. விழாவையொட்டி பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. நேற்றும் யாக சாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றது. இன்று காலை 7.15 மணிக்கு தமிழ் திவ்யப்ரந்த சமர்பணம், வருண தீர்த்தம், புனிதபடுத்துதல் உள்ளிட்டவை நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 10.30 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆஞ்சநேயர் கோயிலில் கோபுரம் கிடையாது. இதனால் புனித தீர்த்தம் ஆஞ்சநேயர் பாதத்தில் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. நாமக்கல் ஆஞ்சநேயர் உலகப் புகழ் பெற்றவர். நரசிம்ம சுவாமி கோயிலுக்கு எதிரே அமைந்துள்ள கோயிலில் 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். இன்று நடைபெற்று வரும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். இதையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.



கோயில் வீதிகளை சுற்றிலும் பிரமாண்ட பந்தல் போடப்பட்டுள்ளது. பக்தர்கள் கூட்ட நெரிசல் இன்றி சுவாமி தரிசனம் செய்ய பேரிகாடு மூலம் வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பை முன்னிட்டு கோயில் வளாகம், மற்றும் பேருந்து நிலையம், உழவர் சந்தை மெயின் ரோடு, பூங்கா ரோடு போன்ற இடங்களில் 100 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கான கட்டுபாட்டு அறை கோயில் அலுவலகம் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகம் முழுவதும் 800க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். கும்பாபிஷேகத்தை காணவரும் பக்தர்களுக்கு, பல்வேறு அமைப்புகள் சார்பில், நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதலுதவி அளிக்கும் வகையில், தற்காலிக மருத்துவமனை, 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் வசதியும் கோயில் அருகாமையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் வாகனங்களை நிறுத்த பூங்கா ரோடு, பொய்யேரிக்கரை சாலை என இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து கோயிலுக்கு பக்தர்கள் வந்து செல்ல இலவச பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை முதல் கோயில் வளாகம் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நேற்று காலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.