சேலம் மாவட்டத்தில் பல்வேறு சிறப்புமிக்க, பழமை வாய்ந்த முருகன் கோயில்கள் உள்ளன. 


முத்துமலை முருகன் கோவில்:


சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்துள்ள ஏத்தாப்பூர் பகுதியில் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முத்துமாலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உலகின் மிக உயர முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு முருகன் சிலை 146 அடியில் மிகப் பிரம்மாண்டமாக காட்சியளித்து பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார்.


குறிப்பாக இந்த கோயிலில் விசேஷ நாட்களில் மூலஸ்தானத்தில் உள்ள முருகர் வள்ளி தெய்வானை இணைந்து தங்க கவசத்தில் காட்சியளித்து வருகிறார். மேலும், இந்த கோயிலில் மாலை தங்கத்தேர் பவனி உலா நடைபெறுவது சிறப்புக்குரிய ஒன்றாகும். முத்துமலை முருகன் கோயில் தற்போது தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். 


காவடி பழனி ஆண்டவர் திருக்கோவில்:


சேலம் மாநகர் சூரமங்கலம் பகுதியில் சேலம் உருக்கு ஆலை செல்லும் வழியில் அமைந்துள்ள காவடி பழனியாண்டவர் கோவில் பழமையான கோவில்களில் ஒன்றாகும். இங்கு பங்குனி உத்திரம் மற்றும் தைப்பூச நாட்களில் பக்தர்கள் தங்களது நேற்று கடனை செலுத்துவதற்காக காவடி எடுத்து வருவர். இந்த கோவிலில் மாலை கோவிலை சுற்றி தங்க தேர் பவனி உலா நடைபெறுவது வழக்கம். இந்தக் கோவிலில் முருகர் பழனியில் உள்ளது போல பால முருகராக காட்சியளித்து பக்தர்களுக்கு அருள் பாவித்து வருகிறார்.


காளிப்பட்டி முருகன் கோவில்:


சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அடுத்துள்ள காளிப்பட்டியில் பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட காளிப்பட்டி கந்தசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் மிகவும் சிறப்பு மிக்க பழமையான கோவில்களில் ஒன்றான கந்தசாமி திருக்கோவிலில் பங்குனி உத்திரம் மற்றும் தைப்பூசம் திருநாளில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம் செய்யப்படும். இந்த கோவிலில் தைப்பூச நாளன்று கந்தசாமி கோவிலில் சித்தர தேர் மற்றும் விநாயகர் தேர் திருவீதி உலா நடைபெறும். மேலும் தைப்பூச நாளன்று இந்த கோவிலின் அருகில் நடத்தப்படும் கால்நடை கண்காட்சி உலக சிறப்புமிக்க ஒன்றாக கருதப்படுகிறது.


கந்தாஸ்ரமம் திருக்கோவில்:


சேலம் மாநகர பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ள மலைக்கோவில்களில் ஒன்றாக கந்தாஸ்ரமம் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் முருகர் கந்த குருவாக காட்சியளித்து பக்தர்களுக்கு அருள் பாவித்து வருகிறார். இந்தக் கோவிலின் கூடுதல் சிறப்பாக பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை உள்ளது. தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விசேஷ நாட்கள் மட்டுமின்றி மலை மீது அமைந்துள்ளதால் சுற்றுலா தளம் போல அனைத்து தினங்களிலும் பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை தந்து முருகனே வணங்கிச் செல்வர்.


குமரகிரி தண்டாயுதபாணி கோவில்:


சேலம் மாநகர பகுதியில் மலை மீது அமைந்துள்ள பழமையான கோவில்களில் ஒன்றாக கருதப்படும் குமரகிரி தண்டாயுதபாணி திருக்கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான திருக்கோவில்களில் ஒன்றான குமரகிரி தண்டாயுதபாணி சிறு மலை கோவில் 700 க்கும் மேற்பட்ட படிகளின் மீது ஏறி பின்னர் முருகனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் ஆர்வம் காட்டுவர்.


குறிப்பாக தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் நாட்களில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து குமரகிரி தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு வருகை தந்து தங்களது நெற்றிக்கடனை முடிப்பர். கடந்த சில ஆண்டுகளாக குமரகிரி தண்டாயுதபாணி திருக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் மலை அடிவாரத்தில் பக்தர்கள் முருகனே தரிசித்து வருகின்றனர்.