மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழாவில் விடிய விடிய நடைபெற்ற கள்ளழகர் தசாவதார நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 

சித்திரைத் திருவிழா 2024

 

மதுரை கள்ளழகர் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 19-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 3 ஆம் நாள் நிகழ்வாக மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக சுந்தரராஜ பெருமாள் கள்ளர் வேடமிட்டு மதுரை நோக்கி புறப்பாடாகினார். இதனையடுத்து நான்காம் நாள் நிகழ்வாக மதுரை மூன்றுமாவடி பகுதியில் இருந்து எதிர் சேவை நிகழ்வானது நடைபெற்றது மூன்று மாவடி, புதூர், டி.ஆர்.ஓ காலனி, ரிசர்வ் லைன் தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் எதிர்சேவை நடைபெற்றது. இதனை தொடர்ந்து 5 ஆம் நிகழ்வாக நேற்று முன்தினம் அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வானது நடைபெற்றது தொடர்ந்து மதிச்சியம் பகுதியில் உள்ள ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நடைபெற்று பின்னர் பல்வேறு பகுதிகளில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளினார்.

 

தசாவதார நிகழ்வு

 

இதனை தொடர்ந்து 6ஆம் நாள் நிகழ்வாக நேற்று காலை வண்டியூர் வீரராக பெருமாள் கோவிலில் எழுந்தருளிய பின்பாக மாலை மதுரை வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதையடுத்து வண்டியூர் அண்ணாநகர், உள்ளிட்ட பகுதிகளில் மண்டகப்படிகளில் எழுந்தருளிய பின்னர் அங்கிருந்து ராமராயர் மண்டபத்திற்கு எழுந்தருளிய கள்ளழகருக்கு சிறப்பு அலங்கார திருமஞ்சனம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தசாவதார அலங்கராங்கள் தொடங்கின இரவு 11 மணிக்கு தொடங்கி விடிய விடிய இன்று காலை வரை நடை பெற்றது. கிருஷ்ன பரமாத்மா வைகுண்டத்தில் இருக்கும் பரம்பொருள் திருமால் பூலோகத்தை காக்க பல அவதாரங்களை எடுத்து அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டினார் அதுவே தசாவதாரமாகும் அதனை எடுத்துரைக்கும் வகையில் கள்ளழகர் முதலாவதாக மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், பரசுராம அவதாரம், இராம அவதாரம், கிருஷ்ண அவதாரம் , மோகினி அவதாரம் என நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை நடைபெற்றது. இந்த தசாவதார அலங்காரங்களை பக்தர்கள் விடிய விடிய கண் விழித்து பார்த்து தரிசித்து பரவசமடைந்தனர். தொடர்ந்து கள்ளழகருக்கு திருமஞ்சனம் நடைபெற்று அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க கோலத்தில் கள்ளழகர் எழுத்தருள, இன்று இரவு தல்லாகுளம் சேதுபதி மன்னர் மண்டபத்தை அடைகிறார் அங்கு பூப்பல்லக்கு நடை பெறவுள்ளது