நம்மில் பலரும் நாள் முழுவதும் மிகவும் கடினமாக உழைப்பார்கள். சம்பாதித்த பணத்தை முறையாகத்தான் சேர்ப்பார்கள். ஆனால், அவர்களால் போதியளவு பணத்தை சேமிக்க முடியாத நிலையிலே இருக்கும். அந்த சூழலில் இருப்பவர்களின் கைகளில் பணம் தங்குவதற்கு ஆன்மீகத்தில் சில ஐதீக முறைகள் உள்ளன.


அவற்றை கடைபிடித்தால் வீட்டில் பணம் தங்கும் என்பது நம்பிக்கை ஆகும். நீங்கள் உழைப்பால் சம்பாதித்த பணம் உங்களிடம் நிலையாக தங்குவதற்கு வெள்ளிக்கிழமை வழிபாட்டை மேற்கொண்டால் செல்வம் பெருகும் என்று ஆன்மீக பெரியோர்கள் கூறியுள்ளனர். அந்த வெள்ளிக்கிழமை வழிபாடு என்ன? அதை எவ்வாறு மேற்கொள்வது? என்பதை கீழே விரிவாக காணலாம்.


வௌ்ளிக்கிழமை வழிபாடு:


வெள்ளிக்கிழமை என்றாலே மங்களகரமான நாள் ஆகும். அப்பேற்பட்ட வெள்ளிக்கிழமை நாளில் வரும் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையிலான நேரத்தை சுக்கிர ஓரை நேரம் என்று குறிப்பிடுகின்றனர். இந்த சுக்கிர ஓரை நேரத்தில், வீட்டில் உள்ள மகாலட்சுமி படத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.


அந்த மகாலட்சுமி படமானது அமர்ந்த நிலையில், பச்சை பட்டு உடுத்தி இருப்பது போல இருந்தால் சிறப்பு ஆகும். நாம் தயாராக எடுத்து வைத்துள்ள மகாலட்சுமி படத்திற்கு அருகில் முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து வைக்க வேண்டும்.


செல்வம் சேரும்:


இப்போது, மகாலட்சுமியின் படத்திற்கு அருகில் நெய் தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். மேலும், கண்ணாடி முன் ஒரு வெள்ளித் தட்டை வைக்க வேண்டும். அந்த தட்டில் பழங்களை வைக்க வேண்டும். வௌ்ளி தட்டு வைக்க முடியாத சூழலில், செம்பு, பித்தளை ஆகிய தட்டுகளை கூட வைக்கலாம். உப்பு தண்ணீரில் கழுவி நாம் சுத்தமாக தயாராக வைத்துள்ள சில்லறை நாணயங்களை தற்போது பழங்களுக்கு அருகில் வைக்க வேண்டும். பழங்கள், நாணயங்கள் ஆகியவற்றின் நடுவில் ஒரு நெய் தீபத்தை ஏற்ற வேண்டும்.


இப்போது, அந்த தீபத்தை வணங்கி செல்வத்தை அளிக்கும் மகாலட்சுமி தேவியை வணங்கி ஓம் மகாலட்சுமியை நமக என்ற நாமத்தை 108 முறை சொல்ல வேண்டும். நாமத்தை கூறி வழிபட்ட பிறகு கண்ணாடியில் பழங்கள், நாணயங்களுடன் உங்கள் முகத்தையும் கண்ணாடியில் பார்க்க வேண்டும். இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை தோறும் மேற்கொண்டால் வீட்டில் செல்வம் வந்து சேரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.


பணம் நம்மிடம் நீடித்து நிற்க நாம் வீண் செலவுகளை தவிர்ப்பதுடன், பணத்தை உதாசீனப்படுத்தாமலும் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.


மேலும் படிக்க: ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு வெண்ணமலை ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்


மேலும் படிக்க: களைகட்டும் கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி..! சூடுபிடிக்கும் சிலைகள் தயாரிப்பும், விற்பனையும்..!