மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் மையப் பகுதியில் காவிரி ஆறு ஓடுகிறது. இந்த காவிரி ஆற்றின் வடக்கு பக்கம் உத்திரமாயூரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பழமை வாய்ந்த புகழ்பெற்ற வதான்யேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற குரு பரிகார ஆலயமான இங்கு ரிஷப தேவரின் கர்வத்தை இறைவன் அடக்கியதாக புராண வரலாறு கூறுகிறது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வருகின்ற பத்தாம் தேதி நடைபெறுகிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் நாளை துவங்குகிறது.
இதனை முன்னிட்டு காவிரி நதியில் புனித நீர் எடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வேதியர்கள் மந்திரம் ஓத கடங்களில் புனித நீர் எடுக்கப்பட்டு, ஐந்து யானைகள் மீது புனித நீர் அடங்கிய கடங்கள் ஏற்றப்பட்டு ஊர்வலமாக வதான்யேஸ்வரர் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது. ஊர்வலத்தில் வெள்ளை குதிரைகள், ஒட்டகம், பசு, மாடு, காளை உள்ளிட்ட மங்கல சின்னங்கள் முன்னே செல்ல, சிலம்பாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள், சிறுவர்கள் கடவுளர்கள் போல் வேடம் அணிந்தபடி பங்கேற்ற நிலையில் வேத மந்திரங்கள் மற்றும் தேவார பதிகங்கள் ஓதியபடி ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியே புனித நீர் அடங்கிய கடங்கள் ஆலயத்தை வந்தடைந்தது.
தொடர்ந்து தருமபுரம் ஆதீன 27 -வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் புனித நீர் அடங்கிய கடங்கள் ஆலயத்திற்குள் எடுத்து செல்லப்பட்டது. பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து நாளை புனிதநீர் அடங்கிய கடங்கள் யாகசாலை பிரவேசம் நடைபெற உள்ளது. இதில் மயிலாடுதுறை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக வதான்யேஸ்வரர் கோயிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 10-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், சொக்கநாத பெருமான் திருஉருவசிலையுடன் கொற்கை வீரட்டேஸ்வரர் கோயிலில் இருந்து குரு லிங்க சங்கம யாத்திரையாக கோயிலை வந்தடைந்தார்.
அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் குதிரை, ஒட்டகம், யானை, சிவன், காளி வேடமணிந்த நாட்டிய கலைஞர்கள் முன்செல்ல இசை வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கோயிலில் நடைபெற்று வரும் யாகசாலை பணிகள் உள்ளிட்ட கும்பாபிஷேக பணிகளை தருமபுரம் ஆதீனம் பார்வையிட்டார்.